பெய்ஜிங்:
சீனாவில் மருத்துவ, முதியோர் பராமரிப்பு அம்சங்களுடன் இணைந்து முதியோருக்கான சிறப்பு ரயில்களை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், முதியோரிடம் கொட்டிக் கிடக்கும் ஓய்வூதியம், சேமிப்புகளைக் குறிவைத்து, சீனப் பொருளியலில் வாங்கும் சக்தியை மீட்க அந்நாடு திட்டமிட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11ஆம் தேதி) சீனக் கலாசார, பயண, வர்த்தகத் துறை அமைச்சுகள் சீன ரயில்வே குழுமத்துடன் ஒன்றிணைந்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளன. அதன்படி, ஓய்வுபெற்ற பயணிகளை குறிவைத்து ரயில்களை விடும் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் ஓய்வுபெற்ற முதியவர்களை இலக்காகக் கொண்டது. இந்த ரயில்கள், பலதரப்பட்ட பயணத் தடங்கள், வருகையாளர்களை வரவேற்கும் விதமான அம்சங்கள் ஆகியவற்றுடன் விரிவான சேவை வழங்கும் விதத்தில் 2027ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
1960களிலிருந்து பல பத்தாண்டுக் காலமாக சீனாவில் நடைமுறையில் இருந்த ஒற்றைக் குழந்தைக் கொள்கை அந்நாட்டில் முதியோர் மக்கள்தொகை அதிவேகமாக உயரக் காரணமாகிவிட்டது.
சீன மக்கள்கொகையில், 2022ஆம் ஆண்டுக் கணக்குப்படி, ஐந்தில் ஒருவர் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர் என்ற நிலை. இது இன்னும் 10 ஆண்டுகளில் 30 விழுக்காடு அளவுக்கு உயரும் என்று சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவிக்கிறது.
சீன சொத்துச் சந்தை சிக்கலில் உழல்வது, வளர்ந்து வரும் வர்த்தகப் பதற்றங்கள் நிலவும் சூழலில் பொருளியல் வளர்ச்சிக்கு முதியோர் வசம் இருக்கும் ஓய்வூதியம், சேமிப்பு போன்றவை பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.