கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில் உள்ள துவாங்கு ஜாஃபர் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர், அது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாக TNB உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த தீ விபத்தில், வென்ட் அவுட் கேஸ் பைப்லைன் மட்டுமே பாதிக்கப்பட்டதாக TNB மின் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ முகமது நஸ்ரி பாசில் கூறினார்.
“CCTV பதிவுகளின் அடிப்படையில், இரவு 8.28 மணிக்குத் தொடங்கிய தீப்பரவல் 14 வினாடிகள் வரை நீடித்தது என்றும், வேகமாக செயல்பட்டு பாதுகாப்பான பணிநிறுத்தத்தை மேற்கொண்ட TNB ஊழியர்களின் நடவடிக்கையால் தீ உடனடியாக அணைக்கப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன என்றும், ஆனால் ஆரம்ப ஆய்வுகளில் ஆலையில் உள்ள சொத்துக்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு பெரிய சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
“குறித்த மின் உற்பத்தி நிலையம் 1,411 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது என்றும், அதில் 350 மெகாவாட் மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, மீதமுள்ளவை வழக்கம் போல் செயல்பட்டன,” என்றும் அவர் கூறினார்.
மேலும் குறித்த மின் உற்பத்தி நிலையம் தனது செயல்பாடுகளைத் தொடர முடியும் என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது என்றும், இந்த தீ விபத்து TNB இன் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கும் திறனைப் பாதிக்கவில்லை என்றும் முகமட் நஸ்ரி உறுதியளித்தார்.