நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பல விதமான தெய்வங்களுக்கு பலவிதமான நாட்களில் பலவிதமான வழிபாடுகளையும் விரத பின்பற்றுவோம். அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் பலருடைய இஷ்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான்.
முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்கக் கூடிய முக்கியமான தினங்களாக கருதக்கூடியது சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை. இந்த மூன்று தினங்களிலும் நாம் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து எந்த வேண்டுதலை முன் வைத்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மாசி மாதத்தின் தேய்பிறை சஷ்டி என்பது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருவதால் இந்த விரதத்தை இருப்பவர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பலனை முழுமையாக பெறுவதற்கும், கேட்ட வரத்தை பெறுவதற்கும் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கேட்ட வரம் கிடைக்க முருகன் வழிபாடு அன்றைய தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விரதத்தை இருக்க ஆரம்பிக்க வேண்டும்.
திட உறவுகளை தவிர்த்து விட்டு திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை விரதம் இருக்க இயலவில்லை என்று நினைப்பவர்கள் வழிபாட்டை மட்டும் மேற்கொண்டால் கூட பலன் கிடைக்கும். விரதம் இருப்பவர்கள் விரத முறையை கடைப்பிடித்து மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
முருகப்பெருமானின் சிலை, வேல் வைத்திருப்பவர்கள் அன்றைய தினத்தில் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு வாழை இலை அல்லது மாயிலை அல்லது அரச இலையை வைத்து அதன் மேல் ஒன்பது அகல் விளக்குகளை வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
ஏதாவது ஒரு இனிப்பு பொருளை முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு “ஓம் சரவணபவ போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் அன்றைய தினத்தில் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு காலையாலோ மாலையிலோ ஒரு முறை மட்டுமாவது கந்த சஷ்டி கவசத்தை முழுமனதோடு எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் முருகப்பெருமானை மட்டும் நினைத்துக் கொண்டு கூறுவதன் மூலம் அவர்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த முறையில் முருகப் பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் கேட்ட வரம் கிடைப்பதோடு செல்வ செழிப்புடன் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் .