கோலாலம்பூர்:
சுமார் 11 ஆண்டுகளின் பின் சீனா திரும்பும் ஃபூ வா (ஜிங் ஜிங்) மற்றும் ஃபெங் யி (லியாங் லியாங்) ஆகிய இரு இராட்சத பாண்டாக்களுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 18) அதிகாலையில் சுமார் 40 பேர் தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒன்றுகூடி மனமார்ந்த பிரியாவிடை அளித்தனர்.

காலை 7.15 மணியளவில், ஃபூ வா மற்றும் ஃபெங் யியை ஏற்றிச் சென்ற வாகனங்கள் தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து புறப்பட்டன. ரசிகர்கள் கையசைத்து, அந்த தருணத்தை நேரடியாக ஒளிபரப்பி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பிடித்தனர், உணர்ச்சிகள் பொங்கி எழ “ஃபூ வா மற்றும் ஃபெங் யிக்கு குட்பை!” என்று பலர் கூச்சலிட்டனர்.

மலேசியா-சீனா உறவுகளின் 40 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் இந்த பாண்டா ஜோடி தேசிய மிருகக்காட்சிசாலைக்கு வந்தன, 2014 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையான காலப்பகுதியில் இந்த ஜோடிக்கு பிறந்த 3 பாண்டா குட்டிகளும் ஏற்கனவே சீனாவிற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், இந்த இராட்சத பாண்டா ஜோடி இன்று தமது தாயகம் திரும்பி, தமது ஓய்வுக்காலத்தைக் கழிக்கும் .

இந்நிலையில் குறித்த பாண்டா பராமரிப்பாளர் முகமட் சைஃபுல்லா முகமட் யூசுப், இந்தப் பாண்டாக்களுடன் சீனாவுக்குச் சென்று சில நாட்கள் தங்கி அவை அங்கு சரியான சூழலில் வசிக்க உதவுவார் என்று தேசிய மிருகக்காட்சிசாலை துணைத் தலைவர் டத்தோ ரோஸ்லி @ ரஹ்மட் அஹ்மட் லானா கூறினார்.

“பாண்டாக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. பாண்டா பாதுகாப்பு திட்டத்தை நாங்கள் எப்போதும் ஆதரித்து வருகிறோம். இந்த ஜோடிக்கு பிரியாவிடை தருவதற்காக வந்த ரசிகர்களை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். இது அதிகாரப்பூர்வ பிரியாவிடை இல்லையென்றாலும், இந்த பண்டாக்களின் இருப்பில் அவர்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது, ”என்று அவர் கூறினார்.





















