ஜோகூர்:
ஜோகூர் மாநிலத்தில் 2027ஆம் ஆண்டுக்கு முன்னதாக மாநில தேர்தல் நடத்தும் எண்ணம் இல்லை என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி தெரிவித்துள்ளார்.
தற்போதைய மாநில அரசாங்கத்தின் பதவிக்காலம் ஏப்ரல் 2027 இல் மட்டுமே முடிவடைவதால், தவணைக்காலத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படாது. பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் மக்களின் நலனுக்காக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த மாநில அரசுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன என்று அவர் கூறினார்.
இருப்பினும் ஜோகூர் மாநில இடைக்கால ஆட்சியாளர், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்தால் சட்டமன்றம் கலைக்கப்படும் என்று ஓன் ஹாஃபிஸ் சொன்னார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெற்று மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இந்த தேர்தலில் தேசிய முன்னணி 56 சட்டமன்ற இடங்களில் 40 சட்டமன்ற இடங்களை வென்ற நிலையில் நம்பிக்கை கூட்டணி 12 சட்டமன்ற இடங்களை வெற்றிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.





















