அவசரமாக தரை இறங்கிய ரயன்ஏர் விமானம்; ஒன்பது பேர் காயம்

பெர்லின்:

இத்தாலியின் மிலான் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயன்ஏர் விமானம் ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (ஜூன் 4) இரவு அவசரமாகத் தரையிறங்கியது.

இடியுடன் கூடிய கனமழை காரணமாக விமானம் மிகக் கடுமையாக ஆட்டங்கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வானிலையால் ஒன்பது பயணிகள் காயமடைந்ததாக ஜெர்மனியக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

ஜெர்மன் தலைநகர் பெர்லினிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் மியூனிக் நகரிலிருந்து ஏறத்தாழ 115 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மெம்மிங்கன் நகரில் பத்திரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தோரில் பெண் ஒருவரும் அவரது இரண்டு வயது குழந்தையும் 59 வயது பெண்மணியும் அடங்குவர்.

மூவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த மற்றவர்களுக்கு விமானத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதிப்படைந்த பயணிகளிடம் ரயன்ஏர் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

மிலான் செல்ல புதன்கிழமை இரவு பயணிகளுக்கு இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்பட்டது. மறுநாள் காலை மாற்று விமானச் சேவையும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here