அரசாங்கத்தின் கடன் சுமை குறைவு: நிதிப் பற்றாக்குறையும் படிப்படியாக குறைப்பு – அன்வார்

கோலாலம்பூர், 

நாட்டின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், அரசாங்கம் புதிய கடன்களை கணிசமாகக் குறைத்துள்ளதாக பிரதமர் மற்றும் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 13வது மலேசியா திட்டத்தை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்த அவர், கடந்த 2023ஆம் ஆண்டில் நாட்டின் புதிய கடன்கள் 9,940 கோடி வெள்ளியிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அதை 7,680 கோடி வெள்ளியாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“2023-ஆம் ஆண்டில் நாங்கள் கடனைக் 9,260 கோடி வெள்ளியாகக் குறைத்தோம். அதை 2024-இல் மேலும் 7,680 கோடி வெள்ளியாகக் குறைத்துள்ளோம். சிலர் தேசியக் கடனின் விவரங்களைப் பற்றிக் குழப்பத்தில் இருக்கலாம். நாம் பெற்ற மொத்தக் கடனும், அதன் வட்டியும் செலுத்தப்பட வேண்டியது தான். எனவே, அரசாங்கக் கடனைக் குறைப்பதே நமது முக்கியக் குறிக்கோளாகும். கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, 9,909 கோடியிலிருந்து 7,600 கோடி வெள்ளியாகக் குறைத்துள்ளோம்,” என அவர் கூறினார்.

அதே நேரத்தில், நிதிப் பற்றாக்குறையையும் படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.5% அளவிலிருந்த நிதிப் பற்றாக்குறை, 2023-இல் 5% ஆகவும், 2024-இல் 4.1% ஆகவும் குறைந்துள்ளதாக அன்வார் கூறினார்.

“இந்த ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை 3.8% ஆகக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்,” என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here