2024இல் SME நிறுவனங்களின் அபரிமித வளர்ச்சி அமைச்சர் பாராட்டு

படங்கள்: தி.மோகன்

கோலாலம்பூர்,

மலேசியாவில் கிட்டத்தட்ட 1.09 மில்லியன் எஸ்.எம்.இ. எனப்படும் சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவை 2024ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வணிகத்தில் 96.1 விழுக்காடு பங்களிப்பை வழங்கியிருக்கின்றன என்று தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இவோன் பெனடிக் கூறினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை எஸ்.எம்.இ. நிறுவனங்கள் வழங்குகின்றன. மலேசியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் எஸ்.எம்.இ. நிறுவனங்கள் தொடர்ந்து அளப்பரிய பங்கினை ஆற்றி வருகின்றன என்று அவர் சொன்னார்.

2024ஆம் ஆண்டில் எஸ்.எம்.இ. வளர்ச்சி 5.8 விழுக்காடாகப் பதிவானது. இவற்றின் மொத்த வருமானம் 652.4 பில்லியன் ரிங்கிட் ஆகும். கட்டுமானத் துறையில் இவற்றின் வளர்ச்சி இரட்டிப்பாகி 17. 3 விழுக்காடு என உயர்வு கண்டது. கட்டடங்களைத் தூய்மைப்படுத்துதல், கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வது போன்ற சிறப்பு துணை தொழில் துறைகளில் மிகச் சிறந்த முறையில் எஸ்.எம்.இ. நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன.

கூரைகளைப் பொருத்துதல், பளிங்கு பதித்தல், ஜன்னல் கதவுகள் பொருத்துதல், நீர்க் குழாய் பொருத்துதல், மின்சாரம் பொருத்துதல் போன்ற பணிகளை எஸ்.எம்.இ. நிறுவனங்கள் திறம்படச் செய்து வருகின்றன. இதன்வழி இவற்றின் கட்டுமானத் துறையில் இவற்றின் பங்களிப்பு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

உள்நாட்டு, நிகர உற்பத்தியில் 2024ஆம் ஆண்டில் இவற்றின் பங்களிப்பு 39.5 விழுக்காடாக பதிவாகியிருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். ஏற்றுமதியைப் பொறுத்தவரை எஸ்.எம்.இ. நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவை பதிவு செய்திருக்கின்றன.

இவற்றின்மூலம் பெறப்பட்ட வருமானம் 196.8 பில்லியன். அதாவது 31.3 விழுக்காடு அதிகமாகும் என்றும் அமைச்சர் கூறினார். 2023இல் இந்த வருமானம் 149.9 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. எஸ்.எம்.இ. நிறுவனங்கள் அல்லாத துறைகளுடன் ஒப்பிடும்போது எஸ்.எம்.இ. நிறுவனங்களின் வருமானம் வலுப்பெற்றிருந்ததைக் காண முடிகிறது என்று டத்தோ இவோன் குறிப்பிட்டார்.
இங்கு 2024 எஸ்.எம்.இ. நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அறிவிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுவுறத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ கைருள் ஸைமி பின் டாவுட், மலேசிய எஸ்.எம்.பி. கார்ப் தலைவர் டான்ஸ்ரீ பெர்னாட் கிலுக் டொம்போக், மலேசிய புள்ளி விவரங்கள் இலாகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மஹிடின், மலேசிய எஸ்.எம்.இ. கார்ப் தலைமை நிர்வாக அதிகாரி ரிஸால் டத்தோ நைனி ஆகியோரும் கலந்து கொண்டனர். நாட்டின் மொத்த ஏற்றுமதியில் எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்களிப்பு 14.3 விழுக்காடு அதிகரித்திருந்தது. 2023இல் அது 12 விழுக்காடாக பதிவு பெற்றிருந்தது.

இந்தப் புள்ளி விவரங்களானது உலகளாவிய அளவில் எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது என்று டத்தோ இவோன் கூறினார்.
சேவைத் துறையில் 2023இல் 33.2 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த வருமானம் 2024இல் இரட்டிப்பாகி 71.3 பில்லியன் ரிங்கிட்டாக உயர்வு கண்டது. இதில் சுற்றுலாத்துறை மிகப்பெரிய பங்கினை ஆற்றியிருக்கிறது.

2024இல் 38 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனர். 2023இல் இந்த எண்ணிக்கை 31.1 விழுக்காடாக அல்லது 29 மில்லியனாக இருந்தது.

சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு 2023 டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 30 நாள் விசா விலக்கு அளிக்கப்பட்டது இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. அதேசமயத்தில், 2024ஆம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் செலவு செய்த தொகை 43.7 விழுக்காடு அதிகரித்து 106.7 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவானது என்று அவர் தெரிவித்தார்.

வேலைச் சந்தையைப் பொறுத்தவரை எஸ்.எம்.இ.தொழில் நிறுவனங்கள் 8.1 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன. 2023ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 3.1 விழுக்காடு அல்லது 250,000 கூடுதலாகும். மேலும் எஸ்.எம்.இ. தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் தலா 80,507 ரிங்கிட் எனப் பதிவாகியது. 2023இல் இதன் மதிப்பு 78,475 ரிங்கிட் ஆகும்.

2024ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்களிப்பு மிகப்பெரிய வளர்ச்சியைக் காட்டியிருக்கிறது. மலேசிய பொருளாதாரத்தின் பிரதான துறையாக எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்களிப்பு போட்டிகளைத் தரக்கூடிய அளவுக்கு வலிமைப் பெற்றிருக்கிறது என்று டத்தோ இவோன் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டைப் பொறுத்தவரை எஸ்.எம்.இ. நிறுவனங்கள் ஆசியான், ஆசியான் – சீனா போன்ற நாடுகளுக்கு தொழில் துறைகளை, தங்களது உற்பத்தித் துறைகளை விரிவுபடுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன.
2024ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் எஸ்.எம்.இ. நிறுவனங்களின் திட்ட மேம்பாடுகள், அமலாக்கங்களைக் கண்காணித்து உதவுவதற்கு தேசிய எஸ்.எம்.இ. தொழில் முனைவோர் மேம்பாடு நிரந்தர செயலகம் அமைக்கப்பட்டது. துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி தலைமையில் ஒவ்வொரு மாதமும் இதன் கூட்டம் நடத்தப்படுகிறது. 14 அமைச்சுகள், 50க்கும் அதிகமான ஏஜென்சிகள், 13 மாநில அரசுகள் ஆகியவை இந்த மன்றத்தில் இடம்பெற்றுள்ளன என்று டத்தோ இவோன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here