கோலாலம்பூர்,
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து குடும்ப உறுப்பினர்களுக்கு, இன்று சிரம்பான் உயர் நீதிமன்றம் ஜாமீன் அனுமதி வழங்கியது.
இதனிடையே, கடந்த மே 14ஆம் தேதி, அமர்வில் நீதிமன்றம் இவர்கள் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்திருந்தது.
டி. சஸ்வீனா (31), டி. போஹராஜ் (32), பர்ஹின் முகமட் அரிஃபின் (23), பி. கே. கோஷென் குமார் (21),பி. கே. சிவீஷினா (23) ஆகியோரே ஜாமீனுக்கு அனுமதி பெற்றவர்கள் ஆவர்.
ஒவ்வொருவருக்கும் RM15,000 ஜாமீனாக விதித்து, குடும்ப உறுப்பினர்கள் இருவரை உத்தரவாதிகளாக நியமிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சாட்சி தரும் நபர்களுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனும் முக்கிய நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த 5 பேர், ஏப்ரல் 10, மாலை 5.45 மணியளவில் Seremban 2, Uptown Avenue, ஜாலான் S2 B10 அருகிலுள்ள ஒரு சிகை அலங்கார நிலையம் முன்பாக , 16 வயது சிறுமியை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி, RM2 மில்லியன் கப்பம் பெரும் நோக்கில் இந்த கடத்தல் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் மீது கடத்தல் சட்டம் 1961 (பிரிவு 3(1)), மற்றும் பெனல் கோட் பிரிவு 34யின் கீழ் ஒன்றிணைந்து குற்றம் செய்தல் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறை, கூடுதலாக அடி தண்டனையும் விதிக்கப்படும்.
இதனிடையே கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, கிள்ளான், பண்டார் புக்கிட் தி ங்கி பகுதியில், இந்தக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஒருவர் என சந்தேகிக்கப்பட்ட நபர், போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




















