ஜோகூர் பாரு:
மலேசியாவில் சட்டவிரோதமாக இணையம் வழி வாடகை வாகன சேவைகளை வழங்கிய சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நான்கு வாகனங்கள் சாலைப் போக்குவரத்துத் துறையிடம் பிடிபட்டுள்ளன.
30, 40 வயது மதிக்கத்தக்க சிங்கப்பூரர்களிடமிருந்து பல பயன்பாட்டு சொகுசு வாகனங்களும் ஒரு வேனும் கைப்பற்றப்பட்டதாக சாலைப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ரம்லி கூறினார்.
“சட்டவிரோதமாக வாடகை வாகனங்களை ஓட்டுவோருக்கு எதிராக ஆகஸ்ட் 9ஆம் தேதியிலிருந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் பிடிபட்ட வாகன ஓட்டுநர்கள் சிங்கப்பூரையும் மற்ற நாடுகளையும் சேர்ந்த பயணிகளை ஜோகூருக்குள் அழைத்துவந்தனர்,” என்றார் அவர்.
மலேசியாவில் வாடகை வாகனச் சேவைகளை வழங்குவதற்கு அவர்களிடம் முறையான உரிமம் இல்லை என்றும் ஏடி ஃபட்லி குறிப்பிட்டார். அத்துடன் மலேசிய சாலை வரி கட்டியதற்கும் பொதுச் சேவை வாகனத்தைப் பதிவு செய்ததற்குமான ஆவணங்கள் ஓட்டுநர்களிடம் இல்லை என்றும் அவர் சொன்னார்.
ஓட்டுநர்கள் சேவை குறித்துச் சமூக ஊடகங்களிலும் செயலிகளிலும் விளம்பரம் செய்கின்றனர். ஜோகூர் பாரு செல்ல ஒருவருக்குக் கிட்டத்தட்ட $180 (RM591) கட்டணத்தை அவர்கள் வசூலிக்கின்றனர். லெகோலேண்ட் மலேசியா செல்வதற்குக் கட்டணம் ஏறக்குறைய $200 (RM657) . ஈப்போவுக்குக் கட்டணம் சுமார் $1,200 (RM3,946).
“இந்த ஓட்டுநர்கள் மலேசிய அரசாங்கத்திடமோ நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பிடமோ சாலைப் போக்குவரத்துத் துறையிடமோ ஒப்புதல் எதனையும் பெறவில்லை,” என்று ஏடி ஃபட்லி தெரிவித்தார். மேலும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
ஒரு வேளை மலேசியாவில் விபத்து நேர்ந்தால், அதனால் பயணிகள், ஓட்டுநர்களுக்கு மட்டுமல்லாமல் இரு தரப்பு உறவுக்கும்கூடக் கடும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று ஏடி ஃபட்லி கூறினார்.




















