8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது

அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில்  மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலோர காவல் படையினர் சம்பவ இடத்தில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகுகள் மூலம், அப்பகுதியில் தேடியபோது ஒருவர் மட்டும் மீட்கப்பட்டுள்ளார். விமானத்தின் உடைந்த பாகங்களும் கண்டறியப்பட்டன. அவை விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. மீட்கப்பட்டவரின் நிலை, மற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதுபற்றி ஜப்பான் கடலோர காவல் படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “யமகுச்சி மாகாணத்தில் உள்ள அமெரிக்க மரைன் கார்ப்ஸ் விமான நிலையமான இவாகுனி நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், ஒகினாவாவில் உள்ள கடேனா விமான தளம் நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானது. கடலில் விழுவதற்கு முன்பாக, யாகுஷிமா  விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கவும் முயற்சி செய்யப்பட்டது” என்றார்.

ஆஸ்ப்ரே விமானம், ஹெலிகாப்டர் போன்று புறப்பட்டு தரையிறங்கக்கூடிய ஹைபிரிட் விமானம் ஆகும். இந்த வகை விமானங்கள் அமெரிக்க ஆயுதப்படைகளின் ஒரு பிரிவான மரைன் கார்ப்ஸ், கடற்படை மற்றும் விமானப்படை பயன்படுத்தப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here