போலியோ என்ற வார்த்தையை அறியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இதன் பாதிப்பு உலகளவில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது- இன்றளவும் ஏற்படுத்தி வருகிறது. மலேசியாவில் போலியோ பூஜ்ஜிய விழுக்காடாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியாகவும் அதே வேளை வரவேற்கத்தக்க வகையிலும் இருக்கிறது. ஆனால் போலியோவை உலகளவில் ஒழிக்க வேண்டும் என்பதே அனைவரின் அவா.
அதற்கான முன்முயற்சியில் ரோட்டரி கிளப் பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது. எந்த காரியத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தேவை நிதி என்பதனை யாரும் மறுக்க முடியாது. போலியோவை ஒழிக்கவும் அதே வேளை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கான உதவி வழங்கும் நோக்கில் 3300 ஹர்தமாஸ் ரோட்டரி கிளப்பின் ஏற்பாட்டில் விருந்து நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விருந்து நிகழ்வு குறித்து ஹர்தமாஸ் மாவட்ட தலைவரும் அமைதிக்கான தலைவருமான டத்தோ டாக்டர் எம்.ஃசிமி (M.shimi) பேசுகையில் போலியோவிற்கான தடுப்பு ஊசியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை ரோட்டரி கிளப்பை சாரும் என்றும் தெரிவித்தார். போலியோ தடுப்பூசிக்காக நாம் 1 அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கினார் உலக போலியோ நிறுவனம் 3 அமெரிக்க டாலரை வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியர்கள் உலக நாடுகளுக்கு பயணம் செய்கின்றனர். அவர்கள் பயணிக்கும் நாடுகளில் போலியோ பாதிப்பு இருந்தால் அதன் பாதிப்பு நமக்கு ஏற்படக் கூடாது என்பதற்கான முன்னேற்பாட்டிலும், வருமுன் காக்க வேண்டும் என்பதற்கேற்ப நாம் இருக்க வேண்டும் என்று கருத்துரைத்தார். தான் ஹர்தமாஸ் ரோட்டரி கிளப் தலைவராக பதவியேற்ற பிறகு பல மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதாகவும் குறிப்பாக இந்தியப் பெண்களை அதிகளவில் ரோட்டரி கிளப்பில் இணைய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.
குறிப்பாக போலியோ குழந்தைகளை பாதிக்கும் என்பதால் நம்மவர்ளுக்கு போலியோ குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற தனது அவாவிற்கு ஏற்ப விருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த டத்தோ புலேந்திரன் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு போலியோ தடுப்பூசி குறித்த விழிப்புணர்வினை வழங்க கலந்துரையாடல் நடத்துவதாக தெரிவித்திருக்கிறார்.
3300ஹர்தமாஸ் ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் சிலாங்கூர் கிளப்பில் அமைதி – போலியோ என்ற தலைப்பில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் 50,000 ரிங்கிட் நிதியுதவி கிடைத்ததாக டத்தோ டாக்டர் ஃசிமி தெரிவித்தார். விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஆதரவும் உதவிக் கரமும் நீட்டிய அனைவருக்கும் நன்றி மலர்கள் உரித்தாகட்டும் என்று அவர் கூறினார்.


























