கங்கார்,
PTPTN எனப்படும் தேசிய உயர் கல்வி நிதியகம் மாணவர்களின் நலனில் பல்வேறு திட்டங்களின் வழி எப்போதும் அக்கறை செலுத்தி வருகிறது. SSPN கருணை சேமிப்புத் திட்டத்தின் கீழ் PTPTN அண்மையில் பெர்லிஸ், ஜெஜாவி, தாமான் காசிங்கில் உள்ள அமாட் ஃபட்லி பின் பஹாருடின் என்ற மாணவரை சந்தித்து நெகிரி செம்பிலான் ராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு உதவித் தொகை வழங்கியது.
ஏழை மக்களின் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலன்களில் அக்கறை கொண்டு அவர்களை நேரில் சந்தித்து ஊக்கம் அளிப்பதோடு கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்தக் கல்வி வழி குடும்பம், சுய வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஒரு தெளிவு வழங்கப்பட்டது.
கடந்த 2025 ஆகஸ்டு 2ஆம் தேதி இச்சந்திப்பு நடந்தது. பிடிபிடிஎன் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உதவித் தொகையை வழங்கினார். இந்த பரிவு நிகழ்ச்சியில் PTPTN தலைமை நிர்வாக அதிகாரி அமாட் டசுக்கி அப்துல் மஜிட், PTPTN உயர் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமாட் ஃபட்லி குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தாயார் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரால் வேலை செய்ய இயலாது. தந்தை காலமாகிவிட்டார். இருப்பினும் இந்த கடினமான வாழ்க்கைச் சூழல் அமாட் ஃபட்லியை எந்த அளவிலும் அசைத்துப் பார்க்கவில்லை. அவரின் எழுச்சியும் அர்ப்பணிப்பும் ஆசிரியர் பயிற்சிக் கழகத்திற்கு செல்லும் அளவிற்கு இட்டுச் சென்றிருக்கிறது.
எஸ்.பி.எம். தேர்வில் 7 ஏ பெற்ற அவர், நெகிரி செம்பிலான் ராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் உயர் கல்வியை தொடங்கவிருக்கிறார். இந்த குடும்பத்தின் நிதித் தேவையை அறிந்து பிடிபிடிஎன் அதன் SSPN கருணை சேமிப்புத் திட்டத்தின் வழி ஸக்காத் உதவி நிதியாக 2,000 ரிங்கிட்டை வழங்கியது. இது SSPN Prime சேமிப்புத் திட்டத்தில் கணக்கு திறக்கப்பட்டு அந்த உதவித் தொகை அமாட் ஃபட்லியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அமாட் ஃபட்லியைப் பொறுத்தவரை அவரின் உயர் கல்வி செலவுகளை ஈடுகட்டுவதற்கு இந்த நிதி பயன்படும். அவரின் நிதிச் சுமையும் குறையும். மேலும் Kasih PTPTN திட்டத்தின் கீழ் அன்றாடத் தேவைக்குரிய மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டது. இதன்வழி குடும்பச் சுமையில் அவரின் கவனம் சிதறாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு துணை புரியும் என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் கூறினார்.
அமாட் ஃபட்லி தன்னுடைய லட்சியத்தில் அதீத கவனம் செலுத்தி கனவுகளை நனவாக்கிக் கொள்ள வேண்டும். திறமைமிக்க மாணவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதற்கு தங்களுடைய கடப்பாடுகளில் ஒன்றாக இதுபோன்ற உதவிகள் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், SSPN கருணை சேமிப்புத் திட்டத்தின் கீழ் இதுபோன்ற பரிவு வருகையானது சம்பந்தப்பட்ட குடும்பத்துடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் ஒளியூட்டுவதற்கு உதவும் என்று சொன்னார். அதேசமயத்தில் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களும் அண்டை வீட்டாரும் அமாட் ஃபட்லி போன்றவரின் குடும்பத்திற்கு அனுசரணையாக இருந்து தேவையான உதவிகளை வழங்குவர் என்று பிடிபிடிஎன் நம்புகிறது என்றும் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் கூறினார்.
SSPN சேமிப்புத் திட்டமானது ஆண்டுக்கு 8 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேல் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகையையும் மலேசியர்கள் பெறுவர். அதேசமயம், 10 ஆயிரம் ரிங்கிட் வரையிலான இலவச தக்காஃபுல் காப்புறுதி பாதுகாப்பும் வழங்கப்படும். மேலும் கவர்ச்சிகரமான லாப ஈவும் வழங்கப்படுவதோடு அரசாங்கத்தின் உத்தரவாதம் பெற்ற சேமிப்பாகவும் இருக்கும் என்று அவர் சொன்னார்.
** டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் (வலமிருந்து இரண்டாவது), அமாட் ஃபட்லியின் தாயாரிடம் நலம் விசாரித்து உதவித் தொகையும் உணவுப் பெட்டியையும் வழங்கியபோது…




















