உள்ளூர் அரிசி விற்பனை மந்தம்: காரணம் ஆராயப்படுகிறது – வேளாண்மை அமைச்சர்

மலேசியச் சந்தையில் உள்ளூர் அரிசி விற்பனை மந்தமாகியுள்ளதற்கான காரணத்தை அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்தார்.

“10 கிலோ உள்ளூர் வெள்ளை அரிசி தற்போது 26 ரிங்கிட்டில் விற்கப்படுகிறது. இறக்குமதி அரிசியுடன் விலைப் பெரிதாக மாறுபடவில்லை. அதனால் உள்ளூர் அரிசியின் விற்பனை தேங்கியிருக்கிறது,” என்று அவர் சனிக்கிழமை (செப்டம்பர் 6) செய்தியாளர்களிடம் கூறினார்.

கிளந்தானின் கோத்தா பாருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், உள்ளூரில் விளைவிக்கப்பட்ட அரிசி வாங்குமாறு மக்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பிரச்சார இயக்கம் ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்தார்.

அவர் மேலும், உள்ளூர் வெள்ளை அரிசிக்கான மானியம் திட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னரும், அதன் விலை 1 கிலோக்கு 2.60 ரிங்கிட் என்ற நிலைமைதான் தொடர்கிறது என்று விளக்கினார்.

அதேபோல, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் முட்டைக்கான மானியம் முற்றாக நீக்கப்பட்ட பின்னரும், விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“விலைவாசி கட்டுக்குள் உள்ளது. உணவுப் பொருட்கள் அனைத்தும் முழுமையாகச் சீராகிவிட்டதாக சொல்ல முடியாது. இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால் நிம்மதியாக இருக்கலாம்,” என அவர் கூறினார்.

குறிப்பாக, முன்பு ஒரு முட்டைக்கான மானியம் 10 காசாக இருந்தது. மே 1 முதல் அது 5 காசாகக் குறைக்கப்பட்டு, ஆகஸ்ட் 1 முதல் முற்றாக நீக்கப்பட்டது. விலை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உண்மையாகவே தேவைப்படுவோருக்கே பயனளிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here