(News by: Malini)
மலாக்கா,
மலாக்கா மாநில அரசு, மாநிலத்தில் இந்து சமூகத்திற்கான கருமக்கிரியை நிலத்திற்கான தேவையை கவனத்தில் கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
மாநில அரசின் தேர்தல் அறிக்கையிலும் இவ்விவகாரத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருந்ததாகவும், அனைத்து மதத்தினரின் தேவைகளையும் மதித்து நிறைவேற்றுவதே அரசின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளது.
மாநில அரசு, இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் குழுவின் மூலமாக, தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியாக பூர்த்தியாகும் வகையில், நீண்டகால தீர்வு ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது இரண்டு நிலத் தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றின் பொருத்தத்தைக் கண்டறிய தொழில்நுட்ப அமைப்புகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இறுதி முடிவு Majlis Mesyuarat Kerajaan Negeri (MMKN) அங்கீகாரத்திற்கு பிறகே அறிவிக்கப்படும்.
மலாக்கா மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ உத்தாமா ரவூப் அப்துல் யூசோ இந்த விவகாரத்தில் வெளிப்படையானும் முழுமையானும் செயல்பட மாநில அரசு உறுதியாக உள்ளதாகவும், இந்து சமூகத்திற்கான உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், மலாக்கா மாநில அரசு, மாநில இந்து சமூகத்தை நம்பிக்கையுடன் காத்திருந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது, நீண்டகாலத்திற்கு சிறந்ததும் நிலைத்தன்மையுள்ளதுமான தீர்வை வழங்குவதற்கான அடிப்படை என்று அவர் கூறினார்.
மாநில அரசு, அனைத்து இனங்களும் மதங்களும் சம உரிமையுடன் மதிக்கப்படுவதை, மலேசிய மடானிi அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப தொடர்ந்து உறுதி செய்யும் என மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் , காடேக் சட்ட மன்ற உறுப்பினரும் மாநில ம.இ.கா தலைவருமான டத்தோ பி. சண்முகம் புலனம் வாயிலாக செய்தியாளர்களுக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





















