சிங்கப்பூரில் உள்ள நிலங்களை விற்பது குறித்து ஆலோசனை – ஜோகூர் இளவரசர்

கோலாலம்பூர்:

மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் மூத்த மகனும் ஜோகூர் மாநில ஆட்சியாளருமான இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், சிங்கப்பூரில் ஜோகூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்பது குறித்து ஆலோசித்து வருவதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டாளர்கள் மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்களுடன் ஜோகூர் இளவரசர் தொடர்பில் இருப்பதாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிடப்படும் நிலம் 16.6 ஹெக்டேர் பரப்பளவில், சிங்கப்பூரின் ஹாலந்து ரோடு மற்றும் டையர்சால் அவென்யூ அருகிலுள்ள சாலைச் சந்திப்பில் அமைந்துள்ளது என்று சொத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சாத்தியமான விற்பனை, 2025 ஜூன் மாதத்தில் சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் ஜோகூர் அரச குடும்பத்துக்கிடையே ஏற்பட்ட நிலமாற்ற ஒப்பந்தத்துடன் தொடர்புடையது. அந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், சிங்கப்பூர் பூமலை (Botanic Gardens) சுற்றுப்புற சூழலுக்குத் தடை ஏற்படாமல், அரச குடும்ப நிலங்களின் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களைத் திசைதிருப்புவதாகும்.

இதற்கிடையில், சிங்கப்பூர் நில ஆணையமும் மற்றும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) வெளியிட்ட கூட்டு அறிக்கையில், தனியார் சொத்து உரிமையாளர்களின் திட்டங்களில் தாங்கள் சம்பந்தப்படுவதில்லை என்று தெளிவுபடுத்தின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here