ரூ.60 லட்சம்தான் சொன்னாங்க… வீடு வாங்கிட்டேன்; வேலைக்கார பெண் பேச்சால் அதிர்ந்து போன எஜமானி

வதோதரா,இந்தியாவில் வீடு வாங்க வேண்டும் என்றால் அது அவ்வளவு சுலபமல்ல. விண்ணை முட்டும் விலையிலேயே வீடுகள் கிடைக்கின்றன. அதற்கு தவணை தொகை கட்டுவது, வீட்டின் உள் அலங்காரம் மற்றும் வெளி அலங்காரங்களை செய்வது என கனவு இல்லத்திற்காக கடும் முயற்சி எடுக்க வேண்டி இருக்கும்.

இந்த நிலையில், குஜராத்தில் நளினி உனாகர் என்ற பெண் வெளியிட்ட எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது. அதில், அவருடைய வீட்டு வேலைக்கார பெண் ஒரு நாள் காலையில் மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறார். சூரத்தில் ரூ.60 லட்சத்தில் 3 படுக்கையறைகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விலைக்கு வந்தது. அதனை வாங்கி விட்டேன் என கூலாக கூறினார்.

இதுபோக நாற்காலி, மேஜை என வீட்டுக்கு தேவையான பொருட்களுக்கு ரூ.4 லட்சம் செலவழித்து இருக்கிறார். இதற்கெல்லாம் ரூ.10 லட்சம் மட்டுமே கடனாக பெற்றேன் என கூறினார். வௌஞ்ச கிராமத்தில் 2 அடுக்குமாடி கொண்ட வீடு மற்றும் கடை ஒன்றையும் வாடகைக்கு விட்டிருக்கிறார். இதனை கூறி விட்டு அவர் வேலையை பார்க்க போய் விட்டார். இதனை கேட்டு நளினி அதிர்ந்து போனார். இதனை கேட்டு வாயடைத்து போய் உட்கார்ந்து விட்டேன் என்றும் தெரிவித்து உள்ளார்.

அந்த பணிப்பெண்ணின் கடின உழைப்பு, திறமையாக சேமித்தல் மற்றும் முதலீடு ஆகியவை அவரை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது. நளினி உனாகர் வெளியிட்ட எக்ஸ் பதிவுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 700-க்கும் கூடுதலானோர் விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.

அதில் ஒருவர், தேவையற்ற பொருட்களை வாங்குவதில் பணம் செலவழித்து, வீணாக்காமல் திறமையாக சேமித்ததில் அவர் வீடு வாங்கியிருக்கிறார் என்றும், ஏன் நீங்கள் வாயடைத்து போய் விட்டீர்கள்? ஒருவர் முன்னேறுகிறார் என்றால் நீங்கள் அதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here