ஸ்ரீ கெம்பங்கான் சுற்றுவட்டப்பாதை அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

கோலாலம்பூர்:

ஸ்ரீ கெம்பங்கானில் உள்ள ப்ளூ வாட்டர் எஸ்டேட் சுற்றுவட்டப்பாதை அருகே அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரு பெண்ணின் சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இருப்பதாக நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் செர்டாங் காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஃபாரிட் அகமட் தெரிவித்தார்.

முதற்கட்ட சோதனைகளில் பாதிக்கப்பட்டவர் சுமார் 144 செ.மீ உயரம் உள்ளவர் என்றும், தோள்பட்டை வரை நீளமுள்ள முடி, நீண்ட நகங்கள் மற்றும் வலது கையில் பச்சை குத்தப்பட்டிருப்பது தெரியவந்தது என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் குறித்த பெண் ” இரண்டு காதுகளிலும் வெள்ளி காதணிகள் மற்றும் பச்சை மற்றும் சிவப்பு துணி வளையல்கள் அணிந்திருந்தார்,” என்று அவர் கூறினார்.

அந்தப் பெண் தெடர்பான வேறு எந்த அடையாளங்களும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று ஃபாரிட் கூறினார்.

கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இந்த வழக்கு குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது செர்டாங் மாவட்ட காவல் தலைமையகத்தையோ 03-8074 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here