ஷா ஆலம்:
இம்மாநிலத்தில் உள்ள கேளிக்கை பூங்காவில் அரசு இலாகா ஒன்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற குடும்ப தின விழாவில் நச்சு உணவு சம்பவம் நிகழ்ந்ததை சிலாங்கூர் சுகாதார இலாகா உறுதிப்படுத்தியுள்ளது.
பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம் வாயிலாக சிலாங்கூர் சுகாதார இலாகா இந்த சம்பவம் குறித்த தகவலை பெற்றுள்ளது.
இலாகா இந்த சம்பவத்தை கடுமையாக கருதுகின்றது. அது தொடர்பிலான கட்டுபாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 4710 பேரில் 322 பேருக்கு வயிறு வலி, வயிற்று போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 92 விழுக்காட்டினர் பெரியவர் என்றும் மீதமுள்ளோர் சிறார், பதின்ம வயதுடையோர் என்றும் தெரிய வந்துள்ளது.
அவர்கள் அனைவரும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் மரணம் ஏதும் பதிவாகவில்லை.
அந்த நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவுகள், சமைக்க பயன்படுத்தப்பட்ட தளவாடங்கள் இந்த உணவு நச்சு சம்பவத்திற்கு காரணம் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் சுகாதார இலாகா தமதறிக்கையில் விவரித்துள்ளது.





















