கோலாலம்பூர்:
லங்காவியில் நண்பர்களுடன் மீன்பிடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 57 வயது மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கம்போங் பெர்ஜாயா, லங்காவியைச் சேர்ந்த ஈஷாக் ஹாஷிம் (57) என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், அவர் லங்காவி சுல்தானா மலிஹா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி கைருல் அஸ்ஹார் நூருதின் உறுதிப்படுத்தினார்.
“படகு உரிமையாளரான ஈஷாக், நேற்று காலை 8 மணியளவில் தனது மூன்று நண்பர்களுடன் துறைமுகத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்றார். மாலை 7.20 மணியளவில் அவர்கள் மீன்பிடி முடித்து திரும்பியபோது கடும் மழை பெய்தது. அதனால் அவர்கள் துறைமுகத்தின் கூரையின் கீழ் தங்கினர். அப்போது ஈஷாக் மீன்பிடிக்கும் கம்பியை எடுக்கச் சென்றபோது மின்னல் தாக்கியது.”
மின்னல் தாக்கிய தாக்கத்தில் அவர் துறைமுகத்தின் கீழே விழுந்ததாகவும், அங்கிருந்தவர்கள் உடனடியாக உதவி செய்து அவரை மீண்டும் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மயக்க நிலையில் இருந்த ஈஷாக் இரவு 8.35 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மரணம் உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் “திடீர் மரணம்” (Sudden Death) என வகைப்படுத்தி விசாரணை தொடங்கியுள்ளனர்.
விபத்துக்குப் பின்னர், அதிகாரிகள் மீனவர்கள் மற்றும் கடல் தொழிலாளர்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கை காலங்களில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
மழை மற்றும் மின்னல் எச்சரிக்கைகள் வெளியிடப்படும் போது, கடல் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்துவது பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.


















