கோலாலம்பூர், நவம்பர் 24:
செரெம்பானில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நேற்று அதிகாலையில், 10 முதல் 12 ஆண்கள் சம்பந்தப்பட்ட ஒரு வன்முறைச் சண்டையில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடிபட்டும், குத்தப்பட்டும் பலத்தக் காயமடைந்த நிலையில், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்துச் செரெம்பான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி அசஹார் அப்துல் ரஹ்மான் உறுதிப்படுத்தினார்.
சம்பவம் குறித்த சிசிடிவி (CCTV) காட்சிகளில், பாதிக்கப்பட்டவர் துரத்தப்பட்டு, நாற்காலியால் தாக்கப்பட்டு, தப்பிக்க முயன்றபோது கத்தியால் குத்தப்படுவது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்தக் கொலை வழக்கை குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் காவல்துறை விசாரித்து வருகிறது.
இதனிடையே சந்தேக நபர்களைக் கண்டறியவும், இந்த வன்முறைச் சம்பவத்திற்கான காரணத்தைத் தீர்மானிக்கவும் சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இத்தகைய வன்முறையைக் கட்டுப்படுத்த நீதி மற்றும் சமூக ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி, தகவல் அறிந்தவர்கள் விசாரணைக்கு உதவுவதற்காக அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்





















