கோலாலம்பூர்:
2026-ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்வதை உறுதி செய்ய, ரேபிட் கேஎல் (Rapid KL) ரயில் மற்றும் பேருந்து சேவைகளின் நேரத்தை அடுத்த புதன்கிழமை (டிசம்பர் 31, 2025) நள்ளிரவைத் தாண்டி நீட்டிப்பதாக பிரசரானா மலேசியா பெர்ஹாட் (Prasarana) அறிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு வசதியாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் சேவைகள் (LRT, MRT & Monorail): தேர்ந்தெடுக்கப்பட்ட 20 முக்கிய ரயில் நிலையங்களில் ஜனவரி 1, 2026 அதிகாலை 2:00 மணி வரை ரயில்கள் இயங்கும் என்று அது அறிவித்துள்ளது.
சன்வே BRT வழித்தடம், 21 முக்கிய பேருந்து வழித்தடங்கள் மற்றும் ரேபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் (ROD) சேவைகள் அதிகாலை 2:30 மணி வரை செயல்படும்.
மேலும் கிளானா ஜெயா வழித்தடம் (LRT): பாசார் ஸிங், மஸ்ஜித் ஜமெக், கேஎல்சிசி (KLCC), அம்பாங் பார்க், கம்போங் பாரு மற்றும் USJ7, அம்பாங் / ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடம் (LRT): ஹாங் துவா, மஸ்ஜித் ஜமெக் மற்றும் மாலூரி, மோனோரயில்: புக்கிட் பிந்தாங் மற்றும் ஹாங் துவா, காஜாங் & புத்ராஜெயா வழித்தடம் (MRT): TRX, முத்தியாரா டாமன்சாரா, காக்ரேன், பெர்சியாரான் கேஎல்சிசி மற்றும் அம்பாங் பார்க் ஆகியவை இந்த சிறப்பு சேவைகளை வழங்கும்.
பயணிகளின் வருகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 31 இரவு 7:30 மணி முதல் ரயில்களின் வரத்து இடைவெளி (Frequency) அதிகரிக்கப்படும்.
அத்தோடு கூட்ட நெரிசலைத்ய் தவிர்க்க பயணிகள் தங்கள் டச் என் கோ (Touch ‘n Go) அட்டைகளில் போதிய இருப்பு வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலதிக தகவல்களுக்கு பயணிகள் MyRapid PULSE செயலியைப் பயன்படுத்தலாம் அல்லது ரேபிட் கேஎல் சமூக ஊடகப் பக்கங்களைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















