கோலாலம்பூர்:
சுங்கை பூலோ, ஜாலான் இண்டஸ்ட்ரி 9 (Jalan Industri 9) பகுதியில் அமைந்துள்ள பிரபல கார் நிறுவனமான புரோட்டானின் சேவை மையத்தில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்தன.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (ஜனவரி 7, 2026) மாலை சுமார் 5.17 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது.
உடனே துரிதமாக செயற்பட்ட தீயணைப்பு படையினர் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வின்படி, சுமார் 51 வாகனங்கள் இந்தத் தீயில் சிக்கிச் சேதமடைந்தது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 200×200 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்தப் பட்டறை கட்டிடம் தீயால் பெருமளவு எரிந்து நாசமானது.
தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால் மாலை 6.28 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஒட்டுமொத்த பண இழப்புகள் குறித்துத் தீயணைப்புத் துறையின் தடயவியல் குழுவினர் தற்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.





















