சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2026, ஜனவரி 11ஆம் தேதி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இருநூறு ஆண்டுகளாகச் சிங்கப்பூர்த் தமிழர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? என்ற தலைப்பில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகி அருண் மகிழ்நன், தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு தேசிய நூலக வாரியம் சார்பாக எழுத்தாளர் அழகிய பாண்டியன் கலந்து கொண்டனர். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தலைவர் சுந்தர் கணேசன் அறிமுக உரையாற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளங்களை எண்மமயமாக்கும் (digitize) தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்த்தை (Tamil Digital Heritage) 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கப்பூர் சுதந்திரமடைந்த ஐம்பது ஆண்டுகளில் வெளியான தமிழ் இலக்கிய வெளியீடுகளை எண்மமயமாக்கி உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளனர். இந்த மாபெரும் பணிக்குப் பிறகு சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தையொட்டி உருவானதே சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம். இது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வையும் வரலாற்றையும் மின்தள ஆவணமாகப் பதிவு செய்கிறது.
சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து உருவாக்கிய கருவூலம் இத்தளம். தேசிய நூலக வாரியத்தைச் சேர்ந்த அழகிய பாண்டியன் இத்திட்டத்தைச் சிறப்பாக வழிநடத்தி 2025ஆம் ஆண்டில் இணையத்தளம் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்தளத்தின் பணிகளை நிறைவு செய்ய முந்நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் அயராது செய்த பணிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். தமிழர் அல்லாத மற்றவர்களும் பங்களித்ததாகக் கூறினார்.
இந்த இணைய தளத்தில் கலை, ஊடகம், பண்பாடு, கல்வி, அமைப்புகள், ஆளுமைகள், இடங்கள், அரசியல், அரசாங்கம், சமயம், விளையாட்டு ஆகிய தலைப்புகளில் குறுங்கட்டுரைகளாகத் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறை சிங்கப்பூர்த் தமிழர்கள், இளைஞர்கள், மாணவர்களைக் கருத்தில் கொண்டு கட்டுரைகள் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு குறுங்கட்டுரையின் இறுதியிலும் அந்தத் தலைப்பைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள உதவும் இணையதள முகவரிகள் இணைக்கப்பட்டுள்ளன. படங்கள், காணொளிகளும் இத்தளத்தில் உள்ளன.
இதன் உள்ளடக்கம் பெரும்பாலும் பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்களிலிருந்தும் நம்பகமான ஆதாரங்களிலிருந்தும் உருவாக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் நேரடித் தொடர்புகளின் வாயிலாகவும் தகவல்களைச் சேகரித்துள்ளனர். ஆதாரங்களின் துல்லியத்தைப் பலமுறை சரிபார்த்து உறுதிப்படுத்தி இணைத்துள்ளனர். புதிய தகவல்களைச் சேர்க்கவும் பழைய தகவல்களைத் திருத்தவும் எளிதாக இருக்கும்படி தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இத்தளத்தின் உள்ளடக்கத்தைப் படிக்க முடியும். டூல்டிப் என்கிற வசதியும் இத்தளத்தில் உள்ளது. தளத்தில் காணக்கிடைக்கும் அடிக்கோடிட்ட தமிழ்ச்சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொல்லை அங்கே காணலாம். அதிமெய்நிகர் என்ற தமிழ்ச்சொல்லை முதன்முறையாகப் படிக்கும் இளைஞர் அதன் பொருளைத் தேடி வேறெங்கும் செல்லாமல் அச்சொல்லின் அருகில் சுட்டியை நகர்த்தியதும் augmented reality எனத் திரையில் காட்டும். இதுபோன்று பல தமிழ்ச்சொற்களின் பொருள்களை எளிதாக அறிய டூல்டிப் உதவுகிறது. தேசிய நூலக வாரியம் இந்த வசதியை இக்கலைக்களஞ்சியத்தில்தான் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது.
இவ்வாறு இத்தளத்தில் உள்ள சிறப்புகளைப் பற்றிய உரையாற்றிய அழகிய பாண்டியன், தளத்தைப் பயன்படுத்துவதை விளக்கக் காட்சியாகவும் செய்துகாட்டினார். இத்திட்டத்தை ஒருங்கிணைத்த ரேணு சிவா, ஜமுனா, நிர்மலா, சேஷ்னி ஆகியோர் சிங்கப்பூரில் இருந்து வந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சிங்கப்பூரின் மூத்த பத்திரிகையாளர் அருண் செங்குட்டுவன், நாராயணன், இளவழகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கத்தில் தமிழ் அறிவு வளாகத்தின் ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு நினைவுப்பரிசு வழங்கினார். மூத்த பத்திரிகையாளர் மாலன், எழுத்தாளர் வெண்ணிலா, தெய்வ சுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். மலேசியாவில் இருந்து கணினியியலாளர் முத்து நெடுமாறன், இளந்தமிழ் முதலியோரும் வருகை தந்திருந்தனர். பொதுமக்கள், பார்வையாளர்கள் சில கேள்விகளையும் பரிந்துரைகளையும் வழங்கினர். அவற்றைக் குறித்துக்கொண்ட குழுவினர் தொடர்ந்து இத்தளத்தினைப் பயன்படுத்தித் தங்களுக்குப் பரிந்துரைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டு விழாவினை நிறைவு செய்தனர்.
ராமேஸ்வரி ராஜா
























