கோலாலம்பூர்:
மலேசியா தனது நிலப்பகுதியை இந்தோனேசியாவிற்கு ஈடாக வழங்கியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சபா-காலிமந்தன் எல்லைக்கு அருகில் உள்ள நுனுகான் (Nunukan) பகுதியில் உள்ள மூன்று கிராமங்களுக்கு ஈடாக, மலேசியா சுமார் 5,207 ஹெக்டேர் நிலத்தை இந்தோனேசியாவிற்கு வழங்கியதாக இணையதளங்களில் செய்திகள் பரவின. இதனால் எல்லைப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நிலப்பரப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்தது.
நேற்று பெர்மாத்தாங் பாசிரில் நடைபெற்ற ‘மடானி கலாச்சாரத் திருவிழா’வில் ஆற்றிய உரையில் பிரதமர் அன்வார் கூறியதாவது: “எல்லையை அளவிடும் பணிகள் குறித்து மலேசியா மற்றும் இந்தோனேசியா இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையவில்லை, அவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார்.
இணையதளங்களில் பரவும் செய்திகள் இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் உண்மையான விவாதங்களைப் பிரதிபலிக்கவில்லை. இரு நாடுகளும் மிகவும் இணக்கமான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் எல்லையோரப் பிரச்சினைகளை அணுகி வருகின்றன. தவறான தகவல்கள் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
இது குறித்து இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் கூறுகையில், எல்லைக் குறிப்பீடு மற்றும் அளவீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் நடக்கின்றனவே தவிர, அவை ‘இலாப-நஷ்டம்’ அல்லது ‘நிலத்திற்கு நிலம் ஈடு செய்தல்’ (Compensation) என்ற அடிப்படையில் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தினார். 45 ஆண்டுகால தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த 2025 பிப்ரவரி 18 அன்று இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.





















