கோலாலம்பூர்:
தம்பினில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த 34 வயதுப் பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து, அவரது அனுமதியின்றி ஆபாசமான முறையில் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் 26 வயது இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 3.46 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் தம்பின் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தான் கடைத்தெருவில் பொருட்கள் வாங்கும்போது ஒரு மர்ம நபர் தன்னைத் தொடர்ந்து வந்ததாகவும், எதிர்பாராத நேரத்தில் தனது பாவாடைக்கு அடியில் (Upskirt) புகைப்படம் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார், கம்போங் பாரு தம்பின் (Kampung Baru Tampin) பகுதியில் வைத்து அந்தச் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று முதல் மூன்று நாட்களுக்குப் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார் என்று, தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் அமிருதீன் சரிமான் கூறினார்.
மேலும் போலீஸ் விசாரணையில் அந்த நபர் ஒரு அரசு ஊழியர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இக்குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507A (பின்தொடர்ந்து துன்புறுத்துதல் – Stalking) மற்றும் பிரிவு 509 (பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பொது இடங்களில், குறிப்பாக வணிக வளாகங்களில் பெண்கள் இத்தகைய அச்சுறுத்தல்களைச் சந்தித்தால், உடனடியாகப் பாதுகாப்பு அதிகாரிகளிடமோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலோ புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
























