உக்ரைன் – ரஷ்யப் போர்: இரு தரப்பிலும் சுமார் 20 லட்சம் வீரர்கள் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு!

கோலாலம்பூர், ஜனவரி 28:

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரில், இரு தரப்பிலும், இதுவரை சுமார் 20 லட்சம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர், மேல்நிலை ஆய்வு மையம் (CSIS) வெளியிட்ட மதிப்பீட்டின்படி, ரஷ்யத் தரப்பில் சுமார் 12 லட்சம் வீரர்களும், உக்ரைன் தரப்பில் 6 லட்சம் வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ரஷ்ய தரப்பின் உயிரிழப்பு 3 லட்சத்து 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இரண்டாம் உலகப் போரை விடவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்போரில், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் ரஷ்யா மாதத்திற்குச் சராசரியாக 35,000 வீரர்களை இழந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ரஷ்யாவின் பலவீனமான போர் உத்திகள், வீரர்களுக்கான போதிய பயிற்சியின்மை, குறைவான மன உறுதி ஆகியவற்றுக்கு மத்தியில், உக்ரைனின் வலுவான தற்காப்பு இந்த இழப்புகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

வெற்றி மிக அருகில் இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் கூறி வரும் நிலையில், கள நிலவரம் அதற்கு மாறாகவே உள்ளது.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைப் பறித்து, எண்ணற்ற குடும்பங்களைச் சிதைத்துள்ள இந்தத் துயரச் சம்பவங்கள் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

போர் முனையில் குண்டுகளும் துப்பாக்கிகளும் ஓய்ந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு பாதுகாப்பான உலகம் அமைய வேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here