எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: அவருடன் பழகியதற்காக மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்!

அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என்ற பெயரில் புதிய தொகுப்பு பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கோப்பில் மிகப்பெரிய தொழிலதிபர் பில் கேட்ஸ் பெயரும் உள்ளது. இதுதொடர்பாக அவர், தற்போது ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு செல்வாக்குமிக்க அமெரிக்க நிதி ஆலோசகர். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் உலகளவில் பல மர்மங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது. கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க புலனாய்வாளர்கள் எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், தொடர்புப் பட்டியல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவிலான தரவுகளைச் சேகரித்தனர். இவைதான் இப்போது, ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

சமீபத்தில், அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆவணங்களின் புதிய தொகுப்பு பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இந்த ஆவணங்களில் ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே அவர் குற்றம் செய்தவர் என்று அர்த்தமல்ல என்று வல்லுநர்களும் புலனாய்வாளர்களும் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த கோப்பில் மிகப்பெரிய தொழிலதிபர் பில் கேட்ஸ் பெயரும் உள்ளது. இதுதொடர்பாக அவர் ஏற்கெனவே மறுத்திருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு பில்கேட்ஸ் பேட்டியளித்துள்ளார். அதில் பாலியல் குற்றங்களுக்காக ஜெஃப்ரி தண்டிக்கப்பட்ட பிறகும் 2011இல் அவரை சந்தித்ததாக பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அதேநேரத்தில், மன்னிப்பும் கோரியுள்ளார். இதுகுறித்து அதில் அவர், “அவருடன் நான் கழித்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன், நான் அப்படிச் செய்ததற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

நிச்சயமாக ஜெஃப்ரி தனக்குத்தானே ஒரு மின்னஞ்சலை எழுதியிருக்கிறார். நான் அவர் குறிப்பிட்டுள்ளவாறு எந்த மின்னஞ்சலையும் எழுதவில்லை. மேலும் அதில் உள்ள தகவல்கள் பொய்யானவை. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏதோ ஒரு வகையில் என்மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளார். அவருடன் நேரத்தைச் செலவிட்டது நான் செய்த முட்டாள்தனம், அவரைத் தெரிந்ததற்காக வருந்தும் பல நபர்களில் நானும் ஒருவன்” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுதொடர்பாக பேசியிருந்த பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா, எப்ஸ்டீன் தொடர்பான இந்த ஆவணங்கள் தனது திருமண வாழ்க்கையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here