கோலாலம்பூர்:
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் AI செயலிகளுக்கு உரிமம் (Licensing) வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து மலேசிய அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
தற்போது AI தொடர்பான குற்றங்கள் இணையத் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டங்களின் கீழ் கையாளப்படுகின்றன. இருப்பினும், எதிர்காலத்தில் AI தொழில்நுட்பத்திற்கெனத் தனித்துவமான புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது என்று, மலேசிய இலக்கவியல் (Digital) அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் கூறினார்.
AI செயலிகள் மற்றும் தளங்கள் மலேசியாவில் இயங்குவதற்கு முறையான உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அச்செயலிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமான அல்லது சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை உருவாக்குவோர் மற்றும் பரப்புவோர் மீது தற்போதைய சட்டங்களின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஆபாசமான படங்களை உருவாக்கிய விவகாரத்தில் ‘Grok’ எனும் AI தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைப்புகளின் விரிவான ஆய்வுக்குப் பிறகே இத்தளங்கள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
AI தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதில் மலேசிய அரசு உறுதியாக உள்ளது. அதே வேளையில், தனிநபர் பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும்போது, அதனைத் தடுக்கத் தயங்காமல் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டத்தோ ஃபாமி ஃபாட்சீல் உறுதிபடத் தெரிவித்தார்.




















