கோலாலம்பூர்:
சுங்கை கோலோக் (Sungai Golok) ஆற்றின் வழியாக அண்டை நாட்டுக்குச் சமையல் எண்ணெயைக் கடத்த முயன்ற கும்பலின் முயற்சியைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.
நேற்று அதிகாலை 12:30 மணியளவில் பெங்காலான் கூபோர் கடல்சார் போலீஸ் மற்றும் பொதுச் செயல்பாட்டுப் படையின் (PGA) 7-வது பட்டாலியன் இணைந்து இந்தச் சோதனையை நடத்தினார்கள்.
ஆற்றங்கரையில் வாகனங்களிலிருந்து சமையல் எண்ணெய் பெட்டிகளைப் படகில் ஏற்றிக் கொண்டிருந்த ஒரு கும்பல், அதிகாரிகளைக் கண்டதும் படகு மூலம் அண்டை நாட்டுக்குத் தப்பியோடினர்.
சம்பவ இடத்தில் கைவிடப்பட்ட 1,983 கிலோகிராம் பாக்கெட் சமையல் எண்ணெய் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு புரோட்டான் வாஜா (Proton Waja), ஒரு புரோட்டான் வீரா (Proton Wira) ஆகிய 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் RM20,000 ஆகும்.
இந்த விவகாரம் 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இக்கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் கண்டறியப் பாசிர் மாஸ் அமலாக்கப் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று, கிளந்தான் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் துணை இயக்குநர் அஸ்வாடி ஜாபர் கூறினார்.
ஜனவரி முதல் பிப்ரவரி 11 வரையான காலப்பகுதியில் மொத்தம் 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் RM439,666 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
இதில் பெட்ரோல், கோதுமை மாவு, சமையல் எண்ணெய், சர்க்கரை, டீசல் மற்றும் சமையல் எரிவாயு (LPG) ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும்.
இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 46 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குபவர்கள் அல்லது கடத்துபவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்வாடி ஜாபர் எச்சரித்துள்ளார்.





















