அலோர் ஸ்டார், பிப்ரவரி 19, 2026:
பெண்டாங்கில் உள்ள ஜாலான் தித்தி கோபா (Jalan Titi Kobah) மேம்பாலத்தில் நேற்று இரவு 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பெண்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பர்இன்டெண்டென்ட் ரோட்ஸி அபு ஹசன் வழங்கிய தகவலின்படி, 36 வயது மதிக்கத்தக்க பெண்மணி தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஒரு MPV காரில் பெண்டாங்கிலிருந்து கோத்தா சராங் செமுட் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்த்திசையில் வந்த ஒரு டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux) ரக வாகனம், கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் வந்த பாதைக்குள் புகுந்து நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் MPV கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த 39 வயது குடும்பத் தலைவர் பலத்த காயங்களுடன் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டார்.
39 வயதான குடும்பத் தலைவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் வந்து அவரது உடலை மீட்டனர்.
36 வயதான மனைவி க்கு முகத்தில் காயம் மற்றும் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் தந்தையின் மடியில் அமர்ந்திருந்த 4 வயது சிறுமிக்கு முகத்தில் காயம் மற்றும் வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களது 13 வயது மகனுக்கு இடது தொடையில் எலும்பு முறிவும், 9 வயது மக்களுக்கு வலது தொடையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
29 வயதான லோரி ஓட்டுநருக்கு இடுப்பு மற்றும் முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த அனைவரும் பெண்டாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டார், சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் (ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல்) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
























