சிம்பாங் ரெங்கம் தண்ணீர் பிரச்சனை: “டேட்டா சென்டர்கள் காரணமல்ல, வறட்சியே காரணம்” – ஜோகூர் மந்திரி பெசார் விளக்கம்!

ஜோகூர் பாரு, பிப்ரவரி 21, 2026:

சிம்பாங் ரெங்கம் மற்றும் பெனுட் பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட தண்ணீர் விநியோகத் தடைக்கும், மாநிலத்தில் உள்ள தரவு மைய (Data Centre) மேம்பாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி தெளிவுபடுத்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மந்திரி பெசார், பின்வரும் விளக்கங்களை முன்வைத்தார்: சிம்பாங் ரெங்கம் அல்லது பெனுட் பகுதிகளில் எந்தவொரு டேட்டா சென்டர்களும் அமையவில்லை.

இந்நிலையில் சிம்பாங் ரெங்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (LRA) விநியோகப் பகுதியிலும் தரவு மையங்கள் இல்லை. அருகிலுள்ள செடெனாக் (Sedenak) தொழில்துறை பகுதியில் உள்ள டேட்டா சென்டர்கள், செமாங்கார் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்துதான் தண்ணீரைப் பெறுகின்றன. அவை மச்சாப் அணையிலிருந்து (Machap Dam) நீரைப் பெறுவதில்லை.

எனவே நீண்ட கால வறண்ட வானிலை மற்றும் நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைந்ததே இந்தத் தற்காலிகத் தடைக்கு உண்மையான காரணமாகும்.

பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் சிம்பாங் ரெங்கம் மற்றும் பெனுட் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருந்த சீரான நேரப் பகிர்வு முறை (Scheduled Water Supply) இப்போது முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மச்சாப் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, அனைத்து வீடுகளுக்கும் இப்போது வழக்கம் போல் தண்ணீர் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களைக் குழப்பும் வகையில் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவது பொறுப்பற்ற செயலாகும் என்று ஓன் ஹபீஸ் சாடினார். “இது போன்ற இக்கட்டான சூழலில் அரசியல் லாபம் தேடுவதைத் தவிர்த்து, உண்மைத் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here