கோலாலம்பூர் | பிப்ரவரி 28, 2026 :
பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக, சாலையின் எதிர்த்திசையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்று பல வாகனங்கள் மோதக் காரணமான ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் காலை 11:28 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ஷம்சுதீன் மாமட் தெரிவித்துள்ளார்.
ஜாலான் டத்தோ அபு பக்கர் 16/1 (Jalan Dato Abu Bakar) என்ற இடத்தில், சிவப்பு நிற Honda CRV ரக வாகனம் ஒன்று, சாலையின் தவறான திசையில் (Against Traffic) நுழைந்து எதிரே வந்த பல கார்கள் மீது மோதியது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் (ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார் .
அதிர்ஷ்டவசமாக இந்தத் தொடர் மோதலில் சிக்கிய வாகன ஓட்டுநர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.





















