கோலாலம்பூர், மார்ச் 16:
சரவாக்கில் உள்ள பள்ளிகளுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சூரியசக்தி மின் திட்டத்தை வழங்க லஞ்சம் கோரியது மற்றும் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சூர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூலை 1 முதல் 3-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் என நீதிபதி டத்தோ நட்சாரின் வோக் நோர்டின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஸைனியைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி ரோஸ்மா தாக்கல் செய்த மனுவை அண்மையில் கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து ரோஸ்மாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 970 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
தற்போது பிணையில் (Bail) உள்ள ரோஸ்மா மன்சூர், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி இந்த மேல்முறையீட்டை மேற்கொண்டுள்ளார்.




















