மத்திய கிழக்கு போர்: மலேசிய வர்த்தகத்தில் பாதிப்பு? ‘நிர்வகிக்கக்கூடிய அளவிலேயே இருக்கும்’ என பொருளாதார நிபுணர்கள் கணிப்பு!

கோலாலம்பூர் | மார்ச் 30, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாகக் கப்பல் போக்குவரத்து மாற்றுப் பாதையில் (Cape of Good Hope) திருப்பி விடப்படுவதால், மலேசியாவின் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலியில் மிதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், ஒட்டுமொத்த பாதிப்பு நிர்வகிக்கக்கூடிய அளவிலேயே இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்வதால் பயண நேரம் 10 முதல் 15 நாட்கள் வரை அதிகரிக்கும் என்று UiTM வணிக மேலாண்மை பீடத்தின் விரிவுரையாளர் டாக்டர் முகமட் இதாம் முகமட் ரசாக் (Dr Mohamad Idham Md Razak) கூறினார்.

மேலும் சரக்குக் கட்டணம் (Freight), காப்பீடு மற்றும் சரக்கு இருப்பு வைப்பதற்கான செலவுகள் உயரும். இது குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நாடுகளுடனான வர்த்தகத்தைப் பாதிக்கும்.

இந்த கூடுதல் செலவுகள் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலையில் எதிரொலித்து, நாட்டில் மிதமான பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மின்னணு (Electronics), வாகன உற்பத்தி (Automotive), சில்லறை வர்த்தகம் மற்றும் உணவு இறக்குமதி போன்ற ‘Just-in-time’ விநியோகச் சங்கிலியை நம்பியிருக்கும் துறைகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் புத்ரா வணிகப் பள்ளியின் பொருளாதார ஆய்வாளர் பேராசிரியர் இடா முகமது யாசின் (Assoc Prof Ida Md Yasin) கூறுகையில்: மலேசியா ஆண்டுதோறும் சுமார் 80 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதில் பால் (45% இறக்குமதி செய்யப்படுகிறது), உணவு மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளின் விலை உயராமல் தடுக்க அரசாங்கம் இலக்கு வைக்கப்பட்ட ஆதரவு நடவடிக்கைகளை (Targeted support) மேற்கொள்ள வேண்டும் என்றார்.

“கார்கள் அல்லது மின்னணு சாதனங்களுக்காகக் காத்திருக்கலாம், ஆனால் உணவு இல்லாமல் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும்,” என அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழலில் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஊக்கத்தொகை (Broad stimulus) வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்துத் தேவைப்படும் அத்தியாவசியத் துறைகளுக்கு மட்டும் நிதியுதவி வழங்குவது போதுமானது என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஏமனின் ‘பாப் அல்-மண்டேப்’ நீரிணை மூடப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மலேசிய நிறுவனங்கள் தங்களின் சரக்கு இருப்புத் திட்டமிடலை (Inventory planning) மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here