கூலாய்:
பெற்றோரின் கண்டிப்பிற்குப் பயந்து ஹோட்டல் அறையில் தங்கிய ஒரு ஜோடி, ஜோகூர் மாநில இஸ்லாமிய சமயத் துறையினரின் (Jainj) சோதனையில் சிக்கி ‘கால்வாட்’ (திருமணமாகாத ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
வேலைக்குச் செல்லும் அந்த ஆணும் பெண்ணும், தங்களின் நண்பர் ஒருவரது ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பிற்குச் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளனர்.
வீடு திரும்பத் தாமதமானதால், பெற்றோரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து நள்ளிரவு சுமார் 12 மணியளவில் குலாயில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
அந்தப் பெண், தான் தனது தோழியின் வீட்டில் தங்குவதாகத் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
காலை 9:30 மணியளவில் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டபோது, குறிப்பிட்ட அந்த அறைக் கதவைத் தட்டியுள்ளனர். 5 நிமிடங்கள் கழித்து 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கதவைத் திறந்துள்ளார்.
உள்ளே சென்ற அதிகாரிகள், குளியலறை கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர்.
பலமுறை தட்டியும் பதில் இல்லாத நிலையில், இறுதியாக 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார்.
அவர் துண்டால் மட்டுமே போர்த்தப்பட்ட நிலையில் இருந்ததாக சோதனையில் ஈடுபட்ட பெண் அதிகாரி தெரிவித்தார்.
விசாரணையில், அவர்கள் இருவரும் தங்களுக்குத் திருமணம் ஆகவில்லை என்பதையும், உறவினர்கள் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டனர்.
தாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் இதுவரை நிச்சயதார்த்தமோ அல்லது முறையான விண்ணப்பமோ செய்யவில்லை என்றும் அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
தற்போது அந்த ஜோடி, 1997-ஆம் ஆண்டு ஜொகூர் மாநில ஷரியா குற்றவியல் சட்டத்தின் பிரிவு 27-இன் கீழ் (கால்வாட் குற்றம்) கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘கால்வாட்’ (Khalwat) என்பது இஸ்லாமியச் சட்டப்படி, ரத்த உறவு இல்லாத அல்லது திருமணம் செய்யாத ஆணும் பெண்ணும் ஒரு மூடிய அறையிலோ அல்லது மறைவான இடத்திலோ தனிமையில் இருப்பதைக் குறிக்கும்.





















