(டில்லிராணி முத்து)
சபாக் பெர்ணம்:
ஆலயம் என்பது வெறும் வழிபாட்டுத் தளமாக மட்டுமே செயல்படாமல், ஒரு சமூகத்தின் இதயமாகவும், அதன் முன்னேற்றத்தின் அடையாளமாகவும் விளங்க வேண்டும் என சபாக் பெர்ணம் திருமுருகன் ஆலயத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற மணிமாறன் முனியாண்டி தமது கருத்தினை வெளிப்படுத்தினார்.
நேற்று முன்தினம் சபாக் பெர்ணம் திருமுருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற திருமுருகன் ஆலயத்தின் 60ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பொதுமக்களிடத்திலும் செய்தியாளர்களிடத்திலும் அவர் இவ்வாறு கூறினார்.
குறிப்பாக நமது இந்தியச் சமூகத்தில், ஆலயங்கள் ஆன்மீகத் தளமாக இருப்பதோடு, கல்விக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஒரு உறுதியான தளமாக மாற வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் நமது மொழி, பண்பாடு, பாரம்பரியத்தை பாதுகாக்கும் முக்கியக் கட்டமைப்பாக உள்ளன.

இந்நிலையில், ஆலயங்கள் தமிழ் பள்ளிகளுடன் இணைந்து செயல்பட்டால், மாணவர்களுக்கு கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பாடு ஏற்படும். இது, எதிர்கால தலைமுறையை நல்ல பண்புகளுடன் உருவாக்கும் ஒரு வலுவான முயற்சியாக அமையும்.
மேலும், ஆலயங்கள் சமூக சேவைகளின் மையமாகவும் திகழ முடியும். உதாரணமாக, இலவச வகுப்புகள், பயிற்சி முகாம்கள், நலத்திட்டங்கள் போன்றவற்றை நடத்துவதன் மூலம், பொதுமக்களுக்கு பலனளிக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இது சமூக ஒற்றுமையையும் பரஸ்பர உதவியையும் வலுப்படுத்தும்.
எனவே, ஆலயங்கள் வழிபாட்டை மட்டுமே சார்ந்ததாக இல்லாமல், கல்வி, பண்பாடு, சமூக சேவைகளை ஒருங்கிணைக்கும் மையமாக உருவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம், நமது சமூகத்தின் வளர்ச்சி மேலும் உறுதியாகும். இத்தகைய மாற்றம் நிகழ்ந்தால், ஆலயங்கள் உண்மையில் ஒரு முழுமையான சமூக சேவை மையமாக மாறி, எதிர்கால தலைமுறைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழும்.
அவ்வகையில் திருமுருகன் ஆலய நிர்வாக தலைவர் என்ற அடிப்படையில் நிர்வாகத்தினருடனும், சமூக தலைவர்களுடனும் இணைந்து செயல்பட்டு, இத்தகைய முயற்சிகள் வெற்றிகரமாக அமைய கண்டிப்பாக பல முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் திருமுருக ஆலயத்தின் கடந்தாண்டின் கணக்கு வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் நிர்வாக பொறுப்பாளர்களுக்கென நடத்தப்பட்ட தேர்தலில் மணிமாறன் முனியாண்டி தலைவராகவும், துணைத் தலைவராக பிரகாஷம் சித்தன் வெற்றி பெற்ற நிலையில் செயலாளராக மோஹன்ராஜ் முனியன், துணைச் செயலாளராக கிஷன்குமரன் செல்வம் ஆகியோர் தேர்தல் இன்றி ஏகமனதாக தேர்வுச் செய்யப்பட்டனர்.





















