5 வயது வளர்ப்பு மகனை சித்திரவதை செய்த தந்தை: காவல் நீட்டிப்பு!

கோலாலம்பூர் :

திரெங்கானு, டுங்கூன் பகுதியில் ஐந்து வயது வளர்ப்பு மகனை கொடூரமான முறையில் சித்திரவதை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது நபருக்கு, மேலும் நான்கு நாட்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி சிறுவனின் விரல்களில் தீக்காயங்கள் இருப்பதைக் கண்ட தாய், கடந்த மே 10-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், சிறுவன் குறும்பு செய்ததால் ஆத்திரமடைந்து, அவனது இடது கை மோதிர விரலை லைட்டரால் (Lighter) சுட்டதாக அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்தோடு நில்லாமல், தனது வளர்ப்புத் தந்தை தனது வயிற்றில் மிதித்ததாகவும், கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றதாகவும் அச்சிறுவன் தன் அக்காவிடம் அழுதுகொண்டே கூறியுள்ளது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டுங்குன் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் ஜுமாய்டி பா சோங் வே (Jumaidy Bah Chong Weh):

“இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் நான்கு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், போலீசார் வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here