4.0 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? நகுலன் கண்ணீர்

கோலாலம்பூர்:

ல்வித் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் தாம் சிறுவயது முதல் கனவு கண்டு வந்த மருத்துவக்கல்வியை அரசாங்க பல்கலைக்கழகத்தில் பயில முடியவில்லை என நகுலன் தேவேந்திரன் எனும் மாணவர் கண்ணீர் மல்க தமது சோகத்தை மக்கள் ஓசையைுடன் பகிர்ந்துக் கொண்டார்.

நான் பூச்சோங் பெர்டானா பகுதியைச் சேர்ந்தவன். எனக்கு ஒரு தங்கை, தம்பி உள்ளனர். என் தங்கை தற்போது மெட்ரிகுலேஷன் கல்வி பயில்கிறார். தம்பி எஸ்பிஎம் தேர்வை இவ்வாண்டு எழுதவிருக்கின்றார். என் தந்தை தேவேந்திரன் விமான நிறுவனத்தில் தற்போது குத்தகை முறையில் பணியாற்றுகின்றார். தாயார் ஷாமளா தேவி இல்லத்தரசி ஆவார்.

எனக்கு 9 வயது இருக்கும்போது கையில் முறிவு ஏற்பட்டது. அச்சமயத்தில் சிகிச்சைக்காக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அந்த சமயத்தில் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்த்து வியந்தேன். அப்போதிலிருந்தே எனக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை மேலோங்கத் தொடங்கியது.

அதனை முழு நேர குறிக்கோளாக கொண்டு நான் கல்வியில் கவனம் செலுத்தினேன். பள்ளியிலும் அறிவியல் பிரிவை எடுத்து பயின்றேன். அதன் அடிப்படையில் எஸ்பிஎம் தேர்வில் 8ஏ மதிப்பெண்களைப் பெற்றேன். அதன்மூலம் சிலாங்கூர் மெட்ரிகுலேஷனில் அறிவியல் கல்வி பயில்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. மெட்ரிகுலேஷன் கல்வியிலும் நான் 4.0 முழுத் தேர்ச்சியைப் பெற்றேன்.

இதனையடுத்து கடந்த ஆண்டு உயர்கல்வி விண்ணப்பத்தில் எனது முதன்மைத் தேர்வாக மலாயா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில விண்ணப்பித்தேன். அதுமட்டுமன்றி மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (யுகேஎம்), சுல்தான் ஸைனால் அபிடின் பல்கலைக்கழகம் ஆகிய அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பித்திருந்தேன்.

அதில் எனக்கு சுல்தான் ஸைனால் அபிடின் பல்கலைக்கழகத்தில் மருத்துவமனை உணவுப் பிரிவு அதிகாரி கல்வி பயில்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இது எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. கேட்டது ஒன்று கிடைத்தது வேறு ஒன்று. மருத்துவக் கல்வி பயில்வதற்கு நான் முழு கல்வித்தகுதியைக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு வழங்கப்பட்டதோ நான் எதிர்பார்க்காத பாடத்திட்டமாகும் என்று நகுலன் குறிப்பிட்டார்.

 

அந்தச் சுழலில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மறுவிண்ணப்பம் செய்த போதிலும் எதிர்பார்த்த துறை கிடைக்கவில்லை. இதனால் என் பெற்றோரும் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி உயர்கல்வி அமைச்சு அதிகாரிகள் வரை பலரை நாடினோம்.

இதுதவிர நான் குறிப்பிட்ட முதன்மை 5 பல்கலைக்கழகங்களுக்குக் கடிதங்களும் அனுப்பினேன். ஆனால், அதற்கும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் என் தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரைப் பரமாரிக்க வேண்டிய சுழல் உருவானது. கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக நான் வீட்டில் இருந்தபடியே பராமரித்து வருகிறேன்.

இந்நிலையில் இவ்வாண்டு உயர்கல்வி பாடத்திட்டத்திற்கான விண்ணப்பத்திற்கும் நான் முயற்சி செய்தேன். அதிலும் முதன்மைத் தேர்வாக மருத்துவக் கல்வியை விண்ணப்பித்தேன். இருந்தபோதிலும் நான் விண்ணப்பித்திருந்த 2ஆம், 3ஆம், 4ஆம் தேர்வுகளுக்கு நேர்காணல் அழைப்பு வந்தது. அவை மருத்துவக் கல்விக்கானது அல்ல.

ஆனாலும், பரவாயில்லை என்று நானும் மெய்நிகர் முறையிலும் நேரடியாகவும் அந்த நேர்காணலில் கலந்துக் கொண்டேன். அதிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. இரண்டாவது ஆண்டாக விண்ணப்பிப்பதால் எனக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற காரணமும் சில இடங்களில் மறைமுகமாக கூறப்பட்டது.

இரண்டு முறையும் முழு மூச்சாக முயற்சி செய்து நான் விரும்பிய பாடத்தைப் பயில முடியாதது எனக்குப் பெரும் வேதனையும் எதிர்காலத்தை எண்ணி பயத்தையும் அளிக்கின்றது. இனி நான் யாரிடம் உதவியை நாடுவது என்றுகூட எனக்குத் தெரியவில்லை. தினந்தோறும் மனவேதனையுடன் நாட்களைக் கடக்கின்றேன் என நகுலன் குறிப்பிட்டார்.

இதற்கிடையே என் மகன் சிறுவயது முதல் மருத்துவராக வேண்டும் என்ற ஒரே லட்சியத்தில் பயணித்தான். அவன் தமது பள்ளிப் பருவத்தை முழுவதுமாக இந்த லட்சியத்திற்காகவே அர்ப்பணித்தான்.

ஒருவேளை தகுந்த தேர்ச்சி இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், என் மகன் முழுமையான மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவன் விண்ணப்பித்த பாடத்திட்டம் வழங்கப்படாதது ஏன் என்று தனக்கு இன்னமும் விளங்கவில்லை என்று தாயார் ஷாமளா தேவி கூறினார்.

எனவே, மக்கள் ஓசை மூலம் என் மகனின் நிலை மற்றவர்களுக்குத் தெரிந்து அவன் தாம் விரும்பிய மருத்துவக் கல்வியைப் பயில எந்த வகையிலாவது வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று நகுலனின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here