புதுமனை புகும் முன் நேர்ந்த சோகம்: மெர்சிங் விபத்தில் புதுமணத் தம்பதி உயிரிழப்பு!

பாசிர் கூடாங்:

கடந்த ஞாயிற்றுக்கிழமை மெர்சிங், ஜாலான் எண்டாவ்-மெர்சிங் 19-ஆவது கிலோமீட்டரில் நேர்ந்த கொடூர மூன்று வாகனங்கள் மோதிக்கபந்து விபத்தில் புதுமணத் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிளந்தானில் தங்களது ஹரிராயா ஹஜ்ஜு கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, தங்களின் புதிய வீட்டிற்கு குடியேறவிருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த 24 வயது முகமது ஃபிர்தாஸின் தந்தை முகமது புஸ்தாமான் அப்துல்லா (50) கூறுகையில், தனது மகனுக்கும் மருமகள் சித்தி நூர் ஆயிஷா அனூர் பீட் பாப்ஜான் கஹார் (23)-க்கும் பாசிர் கூடாங்கில் உள்ள தாமான் ரிந்திங்கில் அண்மையில் ஒரு புதிய வீடு வாங்கியிருந்ததாகக் கண்ணீருடன் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர்களுக்குத் திருமணம் நடந்தது. அதுமுதல் அவர்கள் தாமான் கோத்தா மாசாயில் உள்ள எனது வீட்டில்தான் தற்காலிகமாக தங்கியிருந்தனர். அதனால் அவர்களுக்கு எனத் தனியாக இந்த வீட்டை வாங்கினேன்.

அவர்கள் ஹரிராயா பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக கிளந்தான் புறப்படுவதற்கு முன்பே, நான் அந்தப் புதிய வீட்டின் சாவியைப் பெற்றுவிட்டேன். பண்டிகை முடிந்து திரும்பியதும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிவிட்டு அங்கு குடியேறத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது,” என்று அவர் கூறினார்.

கிளந்தானில் இருந்து ஜோகூருக்குத் திரும்பும்போது, தந்தையின் வாகனமும் தம்பதியரின் வாகனமும் அடுத்தடுத்து (Convoy) வந்துள்ளன. தந்தை புஸ்தாமான் சற்று முன்னதாகச் சென்றுவிட்ட நிலையில், பின்னால் வந்த மகனின் கார் விபத்தில் சிக்கியுள்ளது. சிறிது நேரத்திலேயே காவல்துறை அவசர அழைப்பு மூலம் விபத்துச் செய்தி தந்தைக்குத் தெரிவிக்கப்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு தனது மருமகளின் குடும்பத்துடன் பாசிர் பூதேயில் தம்பதியினர் கொண்டாடிய முதல் மற்றும் கடைசி ஹரிராயா ஹஜ்ஜு பண்டிகை இதுவாகும்.

நான்கு உடன்பிறப்புகளில் மூத்தவரான ஃபிர்தாஸின் உடல் தாமான் சகாயா மாசாய் இஸ்லாமிய மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது மனைவியின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக கிளந்தானில் உள்ள அவரது சொந்த ஊரான பாசிர் பூத்தேக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

நேற்று மாலை 5.10 மணியளவில் பலத்த மழையின் போது, தம்பதியினர் பயணித்த பெரோடுவா மைவி (Perodua Myvi) கார் மேலும் இரண்டு வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது. இதில் மற்றொரு வாகனத்தில் பயணித்த 53 வயதுடைய தம்பதியினரும் காயமடைந்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here