கோலாலம்பூர்:
“இணையத்தில் பகுதி நேர வேலை, அள்ளிக் குவிக்கும் வருமானம்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மோசடிக் கும்பலிடம் தன் வாழ்நாள் சேமிப்பான 396,850 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபரை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தங்களை ஒரு பிரபல மின்-வணிக (E-Commerce) நிறுவனத்தின் பிரதிநிதி என அறிமுகப்படுத்தியுள்ளார். ஆன்லைன் தளத்தில் வரும் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை நிர்வகித்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 10% கமிஷன் தொகையை லாபமாகப் பெறலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய அந்த நபர், அவர்கள் கொடுத்த பணிகளைச் செய்யத் தொடங்கினார். பின்னர், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற பெயரில், பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மோசடிக் கும்பல் அவரை வற்புறுத்தியுள்ளது.
அவர் பணம் செலுத்தச் செலுத்த, அந்த ஆன்லைன் கணினி அமைப்பில் (System) அவருக்கான கமிஷன் தொகையும், லாபமும் அதிகரிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த அவர், மேலும் பல தவணைகளில் பணத்தைச் செலுத்தியுள்ளார்.
ஆனால், திரையில் தெரிந்த லாபப் பணத்தை அவர் தனது வங்கிக் கணக்கிற்கு எடுக்க (Withdraw) முயன்றபோதுதான் அக்கும்பலின் உண்மையான முகம் தெரியவந்தது. “பணத்தை எடுக்க வேண்டும் என்றால், வரி மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்” எனக்கூறி மேலும் பணத்தைக் கேட்டுள்ளனர்.
கையிலிருந்த சேமிப்புப் பணம் தீர்ந்த நிலையிலும், எப்படியாவது தன் பணத்தை மீட்க வேண்டும் என்ற நோக்கில், தனது குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கி அக்கும்பல் கேட்ட தொகையை அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது ‘டாஸ்க் ஸ்கேம்’ (Task Scam), ‘மெர்ச்சண்ட் ஸ்கேம்’ (Merchant Scam) அல்லது ‘இ-காமர்ஸ் ஸ்கேம்’ எனப்படும் நவீன ஆன்லைன் மோசடி முறையாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் கணினி திரையில் காட்டப்படும் லாபம் அனைத்தும் வெறும் போலியான எண்கள் மட்டுமே ஆகும்.





















