ஜோகூரைத் தொடர்ந்து நெகிரி செம்பிலானிலும் சட்டமன்ற கலைப்பு? மந்திரி பெசார் அமினுடின் ஹருண் திடீர் அரண்மனை விஜயம்!

கோலாலம்பூர்:

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றமும் (DUN) விரைவில் கலைக்கப்படலாம் என்ற பலத்த அரசியல் ஊகங்கள் எழுந்துள்ளன. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் இன்று காலை இஸ்தானா ஹிங்காப் (Istana Hinggap) அரண்மனைக்கு அதிரடியாகச் சென்றுள்ளார்.

இன்று காலை 9.05 மணியளவில் அரண்மனைக்கு வருகை தந்த மந்திரி பெசார், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் யாங் டி-பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாப்னி அகமாடுடன் இணைந்து, காலை 10.47 மணி வரை நீடித்த இந்தச் சந்திப்புக்குக் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மந்திரி பெசார், இது “வழக்கமான ஒரு புதன்கிழமை சந்திப்புதான்” என சுருக்கமாகக் கூறி கடந்து சென்றார்.

பொதுவாக, விஸ்மா நெகிரியில் நடைபெறும் மாநில நிர்வாகக் குழு (Exco) கூட்டத்திற்கு முன்னதாக மந்திரி பெசார் அரண்மனைக்குச் சென்று ஆட்சியாளரைச் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போதைய அரசியல் சூழலில் இச்சந்திப்பு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனெனில், சட்டமன்றக் கலைப்பு குறித்த முக்கிய விவாதங்களுக்காக நேற்று காலை 9.30 மணி முதல் பக்காத்தான் ஹரப்பான் (PH) கூட்டணியின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒரு சிறப்பு கூட்டத்தில் பங்கேற்றதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் மறுப்பு: இருப்பினும், இந்த ஊகங்களை ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நேற்று நடைபெற்றது எந்தவொரு அவசர அல்லது சிறப்பு கூட்டமும் அல்ல என்று குறிப்பிட்ட அவர், வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கான (PRN) கூட்டணி தேர்தல் இயந்திரத்தின் தயார்நிலை குறித்து மட்டுமே அதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு ஜூலை 31-க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, நெகிரி செம்பிலானிலும் இந்த அரசியல் நகர்வுகள் அரங்கேறி வருவது மலேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here