சுபாங் ஜெயா:
சன்வே சிட்டியில் (Sunway City) உள்ள புகழ்பெற்ற மொனாஷ் பல்கலைக்கழக (Monash University) வளாகத்திற்கு நேற்று இரவு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய அதிரடிச் சோதனைக்குப் பிறகு பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்பானது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவில் வளாகத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த பாதுகாப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கி அவசரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுபாங் ஜெயா மாவட்டக் காவல்துறையினர், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டு பல்கலைக்கழக வளாகம் முழுவதையும் அக்குவேறு ஆணிவேறாகத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
“காவல்துறையினரின் மிக விரிவான பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகு, பல்கலைக்கழக வளாகத்தில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. சூழல் தற்போது முற்றிலும் சுமுகமாக உள்ளதோடு, சன்வே சிட்டி வளாகம் இன்று (ஜூன் 5) முதல் வழக்கம் போல் இயங்குவதற்குப் பாதுகாப்பானது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்,” என மொனாஷ் பல்கலைக்கழகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நேற்று இரவு பல்கலைக்கழகப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. எனினும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் வழக்கமான கல்வி நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அதன் CSJB வளாகம் மட்டும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்தும், இதன் பின்னணி குறித்தும் சுபாங் ஜெயா போலீசார் மேல்விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.





















