கோலாலம்பூர் :
போர்ட் கிள்ளானில் உள்ள மரச்சாமான்கள் (Furniture) தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடி சோதனையின் போது, அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர் குப்பைத் தொட்டிக்குள் பதுங்கியிருந்த வினோதச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
‘ஓப்ஸ் மெகா’ (Ops Mega) என்ற பெயரில் நடத்தப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர், தொழிற்சாலை வளாகத்தில் இருந்த பெரிய கழிவுக் கொள்கலனுக்குள் (RoRo waste container) சுருண்டு பதுங்கியிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது, தான் அதிகாரிகளைக் கண்டு பதுங்கவில்லை என்றும், “இப்போது ஓய்வு நேரம் என்பதால் நான் சும்மா ஓய்வெடுக்கவே இங்கு வந்தேன்” என்றும் கூறி மழுப்பலாகப் பதிலளித்தார்.
அதே சோதனையில், மற்றொரு வெளிநாட்டுத் தொழிலாளி அதிகாரிகளைக் கண்ட அதிர்ச்சியில் அங்கிருந்த மரம் அறுக்கும் இயந்திரத்திற்குப் பின்னால் பதுங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறை மற்றும் இதர அமலாக்க முகமைகள் இணைந்து இன்று காலை 8:00 மணி முதல் இந்த அதிரடி வேட்டையை நடத்தின.
இச்சம்பவம் குறித்துச் சிலாங்கூர் மாநிலக் குடிவரவுத் துறை (கட்டுப்பாடு) துணை இயக்குநர் முகமட் குஸைரி கமாருதின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இச்சோதனையின் போது மொத்தம் 520 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாகத் தெரிவித்தார். அவர்களில் முறையான ஆவணங்களின்றிப் பல்வேறு குடிவரவு விதிமீறல்களில் ஈடுபட்ட 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 252 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
“கைது செய்யப்பட்டவர்களில் 175 பேர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள், 39 பேர் பாகிஸ்தானியர்கள், 33 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், நால்வர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் இலங்கை குடிமகன் என்றும் சொன்னார்.”
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களின் விசா அல்லது நுழைவு அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துதல் (Misuse of passes), முறையான அடையாள ஆவணங்கள் இன்றி இருத்தல், தங்கும் காலக்கெடு முடிந்தும் சட்டவிரோதமாகத் தங்கியிருத்தல் (Overstaying) மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆவணங்களை வைத்திருத்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மேலதிக விசாரணை மற்றும் ரிமாண்ட் நடவடிக்கைகளுக்காகச் செமினி (Semenyih) குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கு 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சட்டவிரோதக் குடியேறிகளுக்கு வேலை வழங்குபவர்கள் அல்லது அவர்களுக்குப் புகலிடம் அளிக்கும் முதலாளிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராகக் குடிநுழைவுத் துறை எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது என்றும், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகமட் குஸைரி எச்சரித்தார். மேலும், ஆவணமற்ற தொழிலாளர்கள் குறித்த விபரங்கள் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாகத் தகவல் வழங்கி உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
















