அரசியலில் புதிய முகங்கள்!!

(EXCLUSIVE ARTICLE BY CHIEF EDITOR MR M.S. MARYANANDY) 

நாட்டில் நடைபெற்ற 14, 15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய அரசியல் முகம் தோன்றியிருப்பதாகப் பல்வேறு தரப்பினர் கருதுகின்றனர்.

மலேசிய அரசியல் வரலாற்றில் இதற்கு முன் இல்லாத சில அத்தியாயங்கள் தற்போது மலர்ந்திருப்பதாகவே கருதப்படுகிறது. குறிப்பாக கிளாந்தான், திரெங்கானு, கெடா போன்ற மாநிலங்களில் நல்ல செல்வாக்குப் பெற்றிருக்கும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் தற்போது மற்ற மாநிலங்களிலும் தன் செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கின்றது. பெரிக்காத்தான் நேஷனல் தன் சிறகுகளை மற்ற மாநிலங்க ளுக்கும் விரிவுபடுத்தும் வகையில் சில அரசியல் அணுகுமுறைகளையும் தற் போது கையாண்டு வருவதைக் காண முடிகின்றது.

அந்த அடிப்படையில் வரக்கூடிய 16ஆவது பொதுத்தேர்தலில் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தலைமையிலான பாஸ் கட்சியும் டத்தோ டோமினிக் லாவ் தலைமையிலான கெராக்கான் கட்சியும் பெர்சாத்து கட்சியும் அங்கம் வகிக்கும் பெரிக்காத்தான் நேஷனல் மற்ற கூட்டணிகளுக்கு அரசியல் ரீதியில் பெரிய சவாலாக அமையும் என்பதை அரசியல் பார்வையாளர்கள் மறுக்கவில்லை. கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்று முடிந்த 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்திருக்கும் முடிவுகள் அடிப்படையில் பார்த்தால், பெரிக்காத்தான் நேஷனல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளை வெற்றிபெற்றிருப்பதைக் காண முடிகின்றது.

6 மாநிலங்களிலும் உள்ள சட்டமன்றங்களில் 245 இடங்கள் உள்ளன. இவற்றுள் 146 இடங்கள் பெரிக்காத்தான் நேஷனல் வசமாகியிருக்கின்றன. குறிப்பாக திரெங்கானு மாநில சட்டமன்றத்தின் அனைத்து 33 இடங்களையும் பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றி இருப்பது மற்ற கூட்டணிகளின் புருவத்தை உயர்த்திருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் பெரிக்காத்தான் நேஷனல் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துரைத்துள்ளனர். சிலாங்கூர் மாநிலத்தில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றபோதிலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

சிலாங்கூர் சட்டமன்றத்தில் 22 இடங்கள் பெரிக்காத்தான் நேஷனல் வசமாகி இருக்கின்றன. இது ஒருபுறமிருக்க பினாங்கு மாநிலத்தில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் இடங்கள் தற்போது பெரிக்காத்தான் வசமாகி இருக்கின்றன என்பது அம்மாநில அரசியலில் ஏற்பட்டிருக்கும் ஒரு புதிய அதிரடித் திருப்பமாகவே கருதப்படுகிறது.

பினாங்கில் மொத்தம் 11 இடங்கள் தற்போது பெரிக்காத்தான் நேஷனல் வசமாகி இருக்கின்றன. இந்த இடங்கள் அனைத்தும் மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டவை. 2018-இல் நடந்த தேர்தலில் பெரிக்காத்தான் வசம் 87 இடங்கள் இருந்த வேளையில் 2023-இல் நடந்த தேர்தலில் இந்தக் கூட்டணிக்குக் கிடைத்த இடங்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்திருக்கிறது.

அந்த அடிப்படையில் பார்த்தால் இக்கூட்டணியின் வெற்றி விகிதம் 67.8 விழுக்காடு அதிகரித்திருக்கின்றது. இது யாரும் எதிர்பார்க்காத வெற்றியாகும் என்பதை மறுக்க முடியாது என தேசிய பேராசிரியர்கள் மன்றத்தைச் சேர்ந்த டத்தோ டாக்டர் ஜெனிரி அமிர் கூறியிருக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here