கோலாலம்பூர்:
பினாங்கில் திரவ வடிவிலான ஷாபு (Liquid syabu) போதைப்பொருளைத் தயாரித்து விநியோகம் செய்து வந்த கும்பல் ஒன்றை அதிரடியாக முறியடித்த காவல்துறை, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதோடு, 450,000 ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளது.
கடந்த ஜூலை 6-ஆம் தேதி இரவு 9.00 மணியளவில், பினாங்கு மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) செபெராங் பிறை செலாத்தான் பகுதியில் நடத்திய சிறப்பு ஆபரேஷனின் போது இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
“நிபோங் திபால் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 450,000 ரிங்கிட் சந்தை மதிப்புள்ள 9 கிலோகிராம் திரவ ஷாபு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பல் கடந்த மே மாதம் முதல் இப்பகுதியில் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று, பினாங்கு மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை (Negative) என்று முடிவு வந்த போதிலும், அவரிடம் ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் பல்வேறு குற்றவியல் பின்னணிப் பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின் (சொத்து பறிமுதல் சட்டம் 1988) கீழ், சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து சுமார் 70,000 ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கடந்த ஜூலை 7 முதல் வரும் ஜூலை 13-ஆம் தேதி வரை 7 நாட்களுக்குப் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது, இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகளையும் வழங்க வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.




















