( ரெ.மாலினி)
மலாக்கா:
பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாரிசான் நேஷனல் அரசுக்கான ஆதரவை மீட்டுக் கொண்டாலும் மலாக்கா மாநில அரசின் நிலைத்தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது.
மலாக்கா மாநில சட்டமன்றத்தில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 15 இடங்களின் பெரும்பான்மை ஆதரவு அவசியமாகும்.
கடந்த மாநிலத் தேர்தல் முடிவுகளின்படி, தே.மு 21 இடங்களை கைப்பற்றி தெளிவான பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதேவேளை, பிஎச் 5 இடங்களையும், பெரிக்காத்தான் நேஷனல் 2 இடங்களையும் வென்றுள்ளது.
எனவே, பிஎச்-இன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றாலும், பிஎன் தனது 21 இடங்களைத் தக்கவைத்திருப்பதால், தேவையான பெரும்பான்மையை விட ஆறு இடங்கள் கூடுதலாக இருப்பதுடன், மாநில அரசை தொடர்ந்து நடத்தும் வலிமையையும் கொண்டுள்ளது.
இதனால், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டமன்ற எண்ணிக்கையின் அடிப்படையில், தேசிய முன்னணி அரசின் பெரும்பான்மை பிஎச் ஆதரவை சார்ந்ததல்ல என்பதால், முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தமா அப்துல் ரவூப் யூசோப்பின் பதவியிலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
அரசியலில் பல்வேறு கருத்துகளும் அரசியல் நகர்வுகளும் இடம்பெற்றாலும், இறுதியில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள தே.மு தரப்பே ஆட்சியைத் தொடரும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.




















