மலாக்கா அரசில் வெடித்தது மோதல்: ஜசெக-வின் விலகல் முடிவால் பரபரப்பு; சமரச பேச்சுவார்த்தைக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு!

கோலாலம்பூர்:

பாரிசான் நேஷனல் (BN) தலைமையிலான மலாக்கா மாநிலக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து விலகும் தங்களின் அதிரடி முடிவை ஜசெக (DAP) மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பக்காத்தான் ஹரப்பான் (PH) தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநில சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத் திருத்த மசோதாவால் அதிருப்தியடைந்து, மலாக்கா மாநில அரசில் தாங்கள் வகித்து வரும் பொறுப்புகளைத் துறப்பதாக ஜசெக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த திடீர் அரசியல் பரபரப்பைத் தொடர்ந்து, பிரதமரின் இந்தச் சமரச வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தில் 7 நியமன சட்டமன்ற உறுப்பினர்களை (Appointed Assemblymen) அனுமதிக்கும் புதிய அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மலாக்கா ஜசெக தங்களின் பதவிகளை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தது.

இவ்விவகாரம் குறித்துத் தன்னிச்சையாக முடிவெடுக்காமல், தாமும், ஜசெக பொதுச்செயலாளர் அந்தோணி லோக் மற்றும் மலாக்கா முதலமைச்சர் அப் ரவூப் யூசோ ஆகிய மூவரும் முதலில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மலாக்கா மாநில நிர்வாகத்துடன் தங்களுக்குள் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போதைய சூழலில் மக்களின் நலன் மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்ல இக்கூட்டணியைத் தொடர்ந்து நிலைநிறுத்துவது மிகவும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மலாக்கா மாநில அரசில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் அரசியல் விரிசல் தேசிய அளவில் பெரும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here