குளுவாங்கில் பள்ளிப் பேருந்து மோதி முதலாம் ஆண்டு மாணவன் சம்பவ இடத்திலேயே பலி!

கோலாலம்பூர்:

ஜோகூர், குளுவாங் அருகே உள்ள தாமான் ஸ்ரீ லாலாங் (Taman Sri Lalang) பகுதியில், பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே அதே பேருந்து மோதி முதலாம் ஆண்டு பயிலும் பள்ளிச் சிறுவன் ஒருவன் நேற்று மாலை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் குறித்துக் குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் பஹ்ரேன் நோஹ் கூறுகையில், பள்ளிப் பேருந்தை ஓட்டி வந்த 36 வயதுடைய பெண் ஓட்டுநர், சிறுவனை இறக்கிவிட்டுப் பேருந்தை நகர்த்தியபோது இந்த விபத்து நேரிட்டுள்ளதாகத் தெரிவித்தார். விபத்து நடந்ததை உணர்ந்த அதிர்ச்சியில் அந்த பெண் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.

பேருந்து மோதியதில் தலையில் மிகக் கடுமையான காயங்களுக்குள்ளான அந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.

விபத்தை ஏற்படுத்திய பெண் ஓட்டுநர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-ன் கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here