மூன்று மாதங்களுக்கு முன் நடைபெற்ற கோவில் விழா வீடியோ மீண்டும் வைரல்; பொதுமக்கள் அமைதி காக்க போலீஸ் வேண்டுகோள் !

(ரெ.மாலினி)

மலாக்கா:

ன்று சமூக ஊடகங்களில் வைரலான, மலாக்கா ஜாலான் துக்காங் எமாஸ் பகுதியில் உள்ள ஸ்ரீ பொய்யாத்த விநாயகர் மூர்த்தி ஆலயத்தில் நடைபெற்ற மதச் சடங்கு தொடர்பான காணொளி, கடந்த ஏப்ரல் 26 அன்று பதிவு செய்யப்பட்ட பழைய வீடியோ என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறை பொறுப்பு தலைவர் சூப்பிரிண்டெண்ட் ஹலிம் அபாஸ் கூறுகையில், அந்த வீடியோ ‘Naz Kdas’ என்ற ஃபேஸ்புக் கணக்கில் பதிவேற்றப்பட்டு, பள்ளிவாசலுக்கு அருகில் மதச் சடங்கு நடத்தப்பட்டதாகக் கேள்வி எழுப்பும் வகையிலான வாசகத்துடன் பகிரப்பட்டதால் சமூக ஊடகங்களில் பல்வேறு எதிர்வினைகள் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில், அந்த வீடியோ தற்போது மீண்டும் பரப்பப்பட்டிருந்தாலும், உண்மையில் அது மதச் சடங்கு நடைபெற்ற சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வைரலாக்கப்பட்ட பழைய பதிவு என்பது தெரியவந்துள்ளது.

மேலும், 1781 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ பொய்யாத்த விநாயகர் மூர்த்தி ஆலயமும், அதற்கு அடுத்துள்ள கம்போங் கிளிங் பள்ளிவாசலும் பல ஆண்டுகளாக நல்லிணக்கத்துடன் இயங்கி வருகின்றன. அங்கு நடைபெறும் மத நிகழ்வுகள் தொடர்பாக இதுவரை பொதுஅமைதி அல்லது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன், சம்பந்தப்பட்ட மதச் சடங்கை நடத்துவதற்கு முன், ஆலய நிர்வாகம் உள்ளூராட்சி மன்றத்தின் உரிய அனுமதியை அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி பெற்றிருந்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here